திரிபுராவில் வங்கதேசத்தைச் சேர்ந்த கால்நடை திருடர்கள் 3 பேர் கொலை
திரிபுராவில் வங்கதேசத்தைச் சேர்ந்த கால்நடை திருடர்கள் 3 பேர் கொலை
ADDED : அக் 15, 2025 10:32 PM

அகர்தலா: வங்கதேசத்தைச் சேர்ந்த கால்நடை திருடர்கள் 3 பேரை திரிபுராவில் கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது; இரு கிராமவாசிகள் ஒரு ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த 3 கால்நடை திருடர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி கிராமவாசிகள் இருவரும் விசாரித்த போது, திடீரென பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த இருவரும், கிராமவாசிகளை அழைத்துக் கொண்டு, திரிபுராவில் உள்ள இந்தியா - வங்கதேச எல்லைக்கு சென்றுள்ளனர். அங்கு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், 3 கால்நடை திருடர்களும் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த இரு இந்திய கிராமவாசிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த போலீசார் எல்லைப் பகுதிக்கு சென்று உயிரிழந்த 3 வங்கதேசத்தினரின் சடலத்தையும் மீட்டு கோவாய் மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், என்றனர்.
திரிபுரா வங்கதேசத்துடன் சுமார் 856 கிமீ நீள எல்லையை பகிர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதிகளில் கால்நடைகள் திருட்டு மற்றும் எல்லை மீறல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.