மும்பை பெண் பயணியிடம் மோசமாக நடந்த மூன்று டாக்சி டிரைவர்கள் கைது
மும்பை பெண் பயணியிடம் மோசமாக நடந்த மூன்று டாக்சி டிரைவர்கள் கைது
ADDED : நவ 05, 2025 03:05 AM

மூணாறு: மும்பை உதவி பேராசிரியை ஜான்வி, நண்பர்களுடன், 'ஆன்லைன்' டாக்சியில் மூணாறுக்கு அக்., 30ல் சுற்றுலா வந்தார். அந்த டாக்சியை, பழைய மூணாறு பகுதியில் உள்ளூர் டாக்சி டிரைவர்கள் தடுத்து நிறுத்தினர்.
மூணாறில் ஆன்லைன் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு உள்ளதாகவும் கூறி, உள்ளூர் டாக்சி டிரைவர்கள் ஆன்லைன் டாக்சி டிரைவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதனால், போலீஸ், சுற்றுலாத்துறை அதிகாரிகளின் உதவியை உதவி பேராசிரியை நாடினார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உள்ளூர் டாக்சி டிரைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், உதவி பேராசிரியை பயணத்தை முடித்துக் கொண்டு மும்பை திரும்பினார்.
மூணாறில் தனக்கு நேர்ந்த இந்த மோசமான அனுபவத்தை, சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் அவர் பகிர்ந்தார். இது நாடு முழுதும் பரவியது. இதையடுத்து, மூணாறு போலீசார் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரித்தனர். சுற்றுலா பயணிக்கு உதவாமல் உள்ளூர் டிரைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக முதல்கட்ட விசாரணை முடிந்ததையடுத்து, ஏ.எஸ்.ஐ., சாஜிபவுலோஸ், கிரேடு எஸ்.ஐ., ஜார்ஜ்குரியன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதில் தொடர்புடைய டாக்சி டிரைவர்கள் தென்மலை எஸ்டேட் நியூ டிவிஷன் விநாயகன், 44, லாக்காடு பேக்டரி டிவிஷன் விஜயகுமார், 40, தேவிகுளத்தை சேர்ந்த அனீஷ்குமார், 40, ஆகியோரை போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர் .
மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறுகையில், ''மூணாறில் பெண் பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட சம்பவத்தில் ஆறு டிரைவர்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

