தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை!


UPDATED : ஜூலை 29, 2025 12:25 AM

ADDED : ஜூலை 29, 2025 12:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2025 12:25 AM ADDED : ஜூலை 29, 2025 12:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், 'ஆப்பரேஷன் மகாதேவ்' என்ற பெயரில் நம் ராணுவம் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சுலைமான் ஷா உள்ளிட்ட பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், சுற்றுலா பயணியர் 25 பேர் மற்றும் குதிரையேற்ற தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனர்.

லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் கிளையான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த கொடூர தாக்குதல், நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முகாம்கள் அழிப்பு இதையடுத்து, மே 7ல், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு திகளில் நம் ராணுவம் வான் வழி தாக்குதல் நடத்தியது. 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு செயல்பட்ட ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன; பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன.

அதேசமயம், பஹல்காமில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி ஜம்மு - காஷ்மீர் முழுதும் முடுக்கிவிடப்பட்டது.

பாகிஸ்தானைச் சேர்ந்த சுலைமான் ஷா என்ற ஹாசிம் மூசா, இந்த குற்றச் செயலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.

அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், ஸ்ரீநகரில் உள்ள டச்சிகாம் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினரின் சினார் கார்ப்ஸ் பிரிவினர் மற்றும் துணை ராணுவப் படையினர், வனப்பகுதியில் உள்ள லிட்வாஸ் என்ற இடத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை அடர்ந்த வனப்பகுதி என்பதால், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாகவும் சோதனை நடத்தப்பட்டது. முடிவில், பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கூறப்படும் பகுதியை அவர்கள் நேற்று அதிகாலை நெருங்கினர்.

அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டை பல மணி நேரம் நீடித்தது.

'ஆப்பரேஷன் மகாதேவ்' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - இ - தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என்பதை உயர்மட்ட புலனாய்வு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதில், ஒருவர் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சுலைமான் ஷா என்ற ஹாசிம் மூசா என்பதும் உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள இருவரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பர்வேஷ் மற்றும் பஷீர் அஹமது ஆகியோரிடம் இறந்தவர்களின் புகைப்படங்களை காட்டி விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், ரைபிள்கள், ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இறந்த பயங்கரவாதிகள் ஜம்மு - காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி நடவடிக்கையால், அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பயங்கரவாதிகள் தப்பியோடியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், டச்சிகாம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு, கூடுதலாக மேலும் சில பாதுகாப்பு படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சிக்கியது எப்படி? பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர், 'ஹவாய்' நிறுவனத்தின், 'சாட்டிலைட் போன்' பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் நடந்த ஏப்., 22 முதல் அந்த போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதை, 'டிராக்' செய்யும் பணியில் ராணுவ தொலைத்தொடர்பு துறை ஈடுபட்டு வந்தது. பயங்கரவாதிகள் அந்த சாட்டிலைட் போனை நேற்று முன்தினம் மீண்டும் பயன்படுத்திய நிலையில், சோதனையில் அது டச்சிகாம் வனப்பகுதியில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் சுலைமான் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us