பெங்களூரில் ஓட்டு எண்ணும் மையங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு உத்தரவு
பெங்களூரில் ஓட்டு எண்ணும் மையங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு உத்தரவு
ADDED : மார் 03, 2024 06:56 AM

பெங்களூரு: பெங்களூரின் மூன்று லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையங்களில், மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் நேற்று ஆய்வு நடத்தி, மூன்றடுக்கு பாதுகாப்பு போடும்படி உத்தரவிட்டார்.
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள், மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. மூன்று தொகுதிகளுமே பா.ஜ., வசம் உள்ளன. பெங்., தெற்கில் தேஜஸ்வி சூர்யா; பெங்., மத்தியில் பி.சி.மோகன்; பெங்., வடக்கில் சதானந்தகவுடா ஆகியோர் உள்ளனர்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், கடந்த மூன்று மாதங்களாகவே அதற்கான பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் தயாரித்தல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி., பேட் இயந்திரங்கள் குறித்து பயிற்சி அளித்தல், ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
மேலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களும் இப்போதே தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பெங்., மத்திய தொகுதி ஓட்டுகள் வசந்த்நகர் மவுண்ட் கார்மல் கல்லுாரியிலும்;
பெங்., வடக்கு தொகுதி ஓட்டுகள், மல்லையா சாலையின் செயின்ட் ஜோசப் கல்லுாரியிலும்; பெங்., தெற்கு தொகுதி ஓட்டுகள், ஜெயநகர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி., கல்லுாரியிலும் எண்ணப்படுகின்றன.
இந்த ஓட்டு எண்ணும் மையங்களில், மாநகராட்சி தலைமை கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான துஷார்கிரிநாத், பெங்., நகர மாவட்ட கலெக்டர் தயானந்தா, மண்டல கமிஷனர் வினோத் பிரியா உட்பட உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மூன்று அடுக்கு பாதுகாப்பு அமைப்பது, ஊடக மையம் அமைப்பது, தடுப்புகள் அமைப்பது, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவது போன்ற உத்தரவுகளை தலைமை கமிஷனர் பிறப்பித்தார்.

