ADDED : ஜூலை 27, 2025 08:53 PM
புதுடில்லி:மூன்று வெவ்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்ட, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டில்லியைச் சேர்ந்த ஹிமான்ஷீ, கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ரவி, ஆஷிஷ் மற்றும் சாஹில் ஆகிய மூவரைக் கைது செய்தனர்.
முக்கியக் குற்றவாளியான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த காத்ரி, 23, தலைமறைவானார். தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 25ம் தேதி நரேலா சபியாபாத் மோர் அருகே, காத்ரி கைது செய்யப்பட்டார்.
காத்ரி மீது கொள்ளை மற்றும் வாகனத் திருட்டு உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
மற்றொருவர் சிக்கினார் புதுடில்லி மோகன் கார்டனில், 2016ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி, டில்லி உத்தம் நகரில், பாதி எரிந்த நிலையில் ரஹீம் என்ற சல்மான் என்பவர் உடல் மீட்கப்பட்டது.
வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், அன்தாஜ் அன்சாரி, 33, தேவேந்தர் என்ற சோட்டா பாலே ஆகிய இருவரும் சேர்ந்து இரும்புக் கம்பி, செங்கல் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்து உடலை எரித்ததைக் கண்டுபிடித்தனர்.
இந்த வழக்கில், அன்சாரி மற்றும் தேவேந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஜாமினில் வந்த அன்சாரி விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
இதையடுத்து, அன்சாரி குற்றவாளி என, 2024ல் நீதிமன்றம் அறிவித்தது. தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் அன்சாரி கைது செய்யப்பட்டார்.
மேலும் ஒருவர் கைது நரேலா தொழிற்பேட்டை அருகே போர்கர் கிராமத்தில், 12ம் தேதி, தலையில் ரத்தக் காயங்களுடன் வாலிபர் உடல் கிடந்தது. போலீஸ் நடத்திய விசாரணையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, பல்லு, 23, என தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நரேலா போலீசார், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பட்கா முர்மு, 50, கைது செய்யப்பட்டார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், பல்லுவை கொன்றதாக பட்கா முர்மு ஒப்புக் கொண்டார்.
கடந்த, 1986ல் டில்லிக்கு வந்த பட்கா முர்மு, போர்கரில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றியுள்ளார்.

