ADDED : ஆக 21, 2025 10:19 PM

தரியாகஞ்ச்:கட்டுமானப் பணியின்போது, கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மத்திய டில்லியின் தரியாகஞ்சில், சத்பவ்னா பூங்கா அருகே மூன்று மாடி பழைய கட்டடம் உள்ளது. இதன் ஒருபகுதியில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. நேற்று பகல் 12 மணி அளவில் திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். எஞ்சியிருந்த சில தொழிலாளர்களின் கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். எனினும் அவர்களால் இடிபாடுகளை அகற்ற முடியவில்லை.
இடிபாடு குறித்து பகல் 12:14 மணிக்கு தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புப் படையினருடன் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகள் அகற்றப்பட்டபோது, அவற்றுக்குள் இருந்து மூன்று தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்து, மயங்கிய நிலையில் இருந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும் அவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கல் தெரிவித்தனர். பழைய கட்டடத்தில் கட்டுமானப் பணி மேற்கொண்டபோது, சரியான திட்டமிடல் இல்லாததே இடிபாடுக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
முறையான விசாரணைக்குப் பின்னரே விபத்துக்கான காரணம் தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.