திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு
திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு
ADDED : நவ 03, 2024 11:50 PM

திருச்சூர்: இந்த ஆண்டு நடந்த திருச்சூர் பூரம் திருவிழாவின் போது, போலீஸ் கட்டுப்பாடுகளை மீறி திருவிழா நடக்கும் இடத்திற்கு செல்ல, ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரளாவின் திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவிலில் நடக்கும் பூரம் திருவிழா, உலக பிரசித்தி பெற்றது. 30 யானைகள் அணிவகுத்து நின்று, வண்ணக் குடைகள் மாற்றும் நிகழ்ச்சி மட்டுமின்றி, நள்ளிரவில் நடக்கும் வாண வேடிக்கை நிகழ்ச்சியை காண, ஏராளமான பக்தர்கள் திருச்சூரில் திரள்வர்.
இந்த ஆண்டு பூரம் திருவிழா, ஏப்., 20ல் நடந்தது. ஆனால், வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கவில்லை.
ஏமாற்றம்
அந்த நேரத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்ததால், தேர்தல் நன்னடத்தை விதிகளை காரணம்காட்டி, நள்ளிரவு வாண வேடிக்கை நடத்த போலீசார் தடை விதித்தினர்.
அதற்கு பதிலாக, மறுநாள் பகலில் வாண வேடிக்கை நடத்தப்பட்டது. திருச்சூர் பூரம் விழா வரலாற்றில், வாண வேடிக்கை முதன்முறையாக தடைபட்டதை நினைத்து பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் கூறப்பட்டது. பூரம் விழாவில் போலீஸ் தலையீடு மற்றும் வாண வேடிக்கை தாமதம் ஆகியவை அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், திருச்சூர் தொகுதியில் நின்ற பா.ஜ., வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.
திருச்சூரில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, முதல்வர் பினராயி விஜயன் வேண்டுமென்றே பூரம் விழாவில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூ., கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
பூரம் விழா சர்ச்சையின் போது, நடிகர் சுரேஷ் கோபி, விழா நடந்த இடத்துக்கு சென்று கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்களை சந்தித்து பேசினார்.
அரசியல் கட்சியினர், திருவிழா நடந்த இடத்திற்கு செல்ல போலீசார் தடை விதித்து இருந்ததை அடுத்து, சேவா பாரதி என்ற அமைப்புக்கு சொந்தமான ஆம்புலன்சில் சுரேஷ் கோபி ரகசியமாக அந்த இடத்துக்கு சென்றாக, இந்திய கம்யூ., பிரமுகர் கே.பி.சுமேஷ் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.
மறுப்பு
ஆனால், சுரேஷ் கோபி இதை மறுத்தார். தன் காரில் கோவில் நோக்கி சென்றதாகவும், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தன் கார் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கிருந்த சில இளைஞர்கள் தன்னை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பியதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், சுமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய இணைஅமைச்சர் சுரேஷ் கோபி, அபிஜித் நாயர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தடையை மீறி, திருவிழா நடந்த இடத்துக்கு சென்றது, ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியது, மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் வாகனத்தை வேகமாக ஓட்டியது உட்பட பல்வேறு பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.