தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
ADDED : ஜூன் 02, 2025 04:05 PM

பெங்களூரு: தக் லைப் பட விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தக் லைப் படம் ஜூன் 5ம் தேதி ரிலீசாகிறது. கமல்ஹாசன், சிம்பு, ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா நடிப்பில், மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
படம் தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்றார். அவரின் இந்த தமிழ், கன்னடம் ஒப்பீடு கர்நாடகாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட மொழியை சிறுமைப்படுத்தி விட்டதாகவும், அதன் வரலாறு தெரியாமல் கமல் பேசியிருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதிக்க, கர்நாடகாவில் தக் லைப் படம் ரிலீஸ் ஆகாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் தக் லைப் படத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் சட்டப்பூர்வ தலையீடு கோரி கர்நாடக ஐகோர்ட்டை கமல்ஹாசன் நாடி உள்ளார். தமது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ரிட் மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக அரசு, போலீஸ் மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் தமது படம் வெளியிடுவதை தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் கோரியுள்ளார். மேலும், திரையீட்டின் போது போதிய பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.