ADDED : ஏப் 30, 2026 01:22 AM

புதுடில்லி: தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று அதிகாலையில் டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டில்லியில் சில நாட்களாகவே வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. வெப்பநிலை கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 44 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவானது.
இந்நிலையில், டில்லி மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் சில பகுதிகளில் நேற்று அதிகாலையில் இடியுடன் மழை பெய்தது.
கடும் வெப்பத்தில் தவித்த டில்லி மக்கள், இதமான சூழ்நிலை ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
சப்தர்ஜங்கில் நேற்று வெப்பநிலை குறைந்தபட்சமாக 20.4 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இயல்பை விட 3.4 டிகிரி செல்ஷியஸ் குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல, குறைந்த பட்ச வெப்பநிலை பாலம் - 20, லோதி சாலை - 20.8, ரிட்ஜ் - 20.8, அயநகர் - 21.4 செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. டில்லியில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டில்லியை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் சுழற்காற்று காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காற்றின் தரக்குறியீடு நேற்று 245 ஆக பதிவாகி இருந்தது. இது, மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
