கேரள பஸ்களில் பாலின அடிப்படையில் டிக்கெட் வினியோகம்
கேரள பஸ்களில் பாலின அடிப்படையில் டிக்கெட் வினியோகம்
ADDED : மே 09, 2026 11:50 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பஸ்களில் பாலின அடிப்படையில் டிக்கெட் வழங்கும் முறையை, கேரள மாநில சாலை போக்குவரத்து அமைப்பு நேற்று அமல்படுத்தியது.
கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போது, மாநிலம் முழுதும் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் என்ற வாக்குறுதி இந்த கூட்டணி சார்பில் அளிக்கப்பட்டது.
புதிய அரசு ஆட்சி அமைத்தவுடன், இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்பதால், இதை செயல்படுத்துவதை எளிதாக்கும் வகையில் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
டிக்கெட் இயந்திரங்களில், பயணியரின் பாலினத்தின் அடிப்படையில் டிக்கெட் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, டிக்கெட்டு களை வினியோகிக்கும் போது பயணியரின் பாலி னத்தை குறிப்பிடும் வகை யில், பெண்கள், ஆண் கள், குழந்தைகள் ஆகி யோருக்கான தேர்வுகள் டிக் கெட் இயந்திரங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது குறித்து, அனைத்து அரசு பணிமனைகளுக்கும் மாநில சாலை போக்குவரத்து அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையில், 'அரசு பஸ்களில் உள்ள நடத்துநர்கள், இந்த டிக்கெட் இயந்திரங்கள் மூலம் டிக்கெட்டுகளை வழங்கும்போதே, பயணியரின் பாலின வகையை பதிவு செய்ய வேண்டும்' என குறிப்பிட்டுஉள்ளது.
இதன் மூலம், அரசு பஸ்களில் தினமும் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு முயற்சியாக, அரசு தரப்பில் இந்த பாலின அடிப்படையில் டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
