டிக்கெட் விற்பனையில் மோசடி: 5 மாநிலங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை
டிக்கெட் விற்பனையில் மோசடி: 5 மாநிலங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை
UPDATED : அக் 26, 2024 03:34 PM
ADDED : அக் 26, 2024 03:28 PM

புதுடில்லி: பிரபல பாடகர்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு செய்து பணமோசடி நடப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, 5 மாநிலங்களில் உள்ள 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
ஹிந்தி திரைப்படங்களில் பின்னணியும், சொந்தமாக பாடல் எழுதியும் மேடைகளில் பாடி வருபவர் பிரபல பாடகர் தில்ஜித் தோசாஞ்ச். இவர் இன்று( அக்.,26) டில்லி என்.சி.ஆர்., பகுதியில் இசைக்கச்சேரி நடத்த உள்ளார்.
அதேபோல், லண்டனை சேர்ந்த பாப் பாடகர் கோல்ட்பிளே. இவர் வரும் ஜன., 18 முதல்19 தேதிகளில் மும்பைகளில் இசைக்கச்சேரி நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக டிக்கெட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். 'புக்மை ஷோ' மற்றும் 'சோமேட்டோ'வில் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. இதனையடுத்து டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் கள்ளச்சந்தை மூலம் டிக்கெட் வாங்க முயற்சி செய்கின்றனர். இதில் பண மோசடி நடப்பதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து டில்லி, மும்பை, ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் சண்டிகரில் உள்ள 13 நகரங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமலாக்கத்துறை சோதனையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் மூலம் சிலர் போலியாக டிக்கெட்கள் விற்பனை செய்துள்ளனர். மொபைல்போன்கள், லேப்டாப்கள், சிம்கார்டுகள் மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டவர்களை கண்டறிய இச்சோதனை நடந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.