மைசூரு,: சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதியதில் புலி ஒன்று பலியானது.
மைசூரு நகரின், மண்டகள்ளி விமான நிலையம் அருகில், மைசூரு - நஞ்சன்கூடு நெடுஞ்சாலையில், வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம்.
வாகனத்தில் செல்லும்போது, சாலையை கடந்து செல்லும், சாலை ஓரமாக நடந்து செல்லும் புலி, சிறுத்தை, யானை, முயல், மான், கரடி உட்பட, வனவிலங்குகளை காணலாம்.
இதே காரணத்தால், நெடுஞ்சாலையில் வாகனங்களை வேகமாக ஓட்டுவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. ஆனால் சில வாகன ஓட்டுனர்கள், இந்த உத்தரவை மீறுகின்றனர்.
இதே சாலையில், நேற்று அதிகாலை புலியொன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது வேகமாக வந்த கார் மோதியதில், புலி உயிரிழந்தது.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், ஆய்வு செய்தபோது அது ஒன்றரை வயதான ஆண் புலி என்பது தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை, பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.