தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சமையல் எரிவாயு அமைப்பை மாற்றும் தருணம்

சமையல் எரிவாயு அமைப்பை மாற்றும் தருணம்

சமையல் எரிவாயு அமைப்பை மாற்றும் தருணம்


ADDED : ஏப் 17, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 03:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் சாதாரண நாட்களில், தினமும் கிட்டத்தட்ட 50 லட்சம் மக்கள் எல்.பி.ஜி., சிலிண்டர்களை பதிவு செய்கிறார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலை வழக்கமானதல்ல. மேற்காசிய போரின் தாக்கம், குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பலில் வரும் எரிவாயு வினியோகத்தில் ஏற்பட்ட தடைகள், இந்தியாவின் சமையல் எரிவாயு சப்ளையை பாதித்துள்ளது. இ தற்கு மாற்று வழியாக, எல்.என்.ஜி.,யை எதிர்பார்க்கிறது மத்திய அரசு.

ஹர்மூஸ் ஜலசந்தி உலகளவில் எரிவாயு மற்றும் எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான பாதையாகும். ஆனால், போர் காரணமாக அங்கு உள்ள திரவமாக்கும் ஆலைகள் சேதம் அல்லது தற்காலிகமாக மூடப்பட்ட தன் காரணமாக, ஏற்றுமதிக்கான எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளது.

இதன் விளைவாக, இந்தியாவில் தினசரி எல்.பி.ஜி., சிலிண்டர்கள் முன்பதிவு 90 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட இருமடங்கு. இது அச்சத்தின் காரணமாக செய்யப்படும் அவசர முன்பதிவாகும். மக்கள் தங்களிடம் இருக்கும் சிலிண்டர் காலியாகும் முன்பே புதியதை பெற முயற்சிக்கிறார்கள்.

குழாய் வழி வினியோகம் இந்த நெருக்கடி, அரசின் பி.என்.ஜி., அதாவது, குழாய் வழி எரிவாயு வினியோக திட்டத்துக்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது. இது, சிலிண்டரின் தேவையின்றி, நேரடியாக வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் முறை. சிலிண்டர் காலியாகும் கவலை இல்லாமல் தொடர்ச்சியான வினியோகத்தை உறுதி செய்கிறது.

பி.என்.ஜி.,யின் பலன்கள் தெளிவாக உள்ளன. சிலிண்டர் நிரப்புதல், வாகனங்களில் ஏற்றுதல், போக்குவரத்து சிக்கல்கள், டெலிவரி போன்ற சுமைகள் வினியோகஸ்தர்களுக்கு இல்லை. இதனால், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசல் குறைவு மற்றும் காற்று மாசுபாடு குறைவு, வினியோக செலவில் சிக்கனம் ஆகியவை கிடைக்கின்றன.

இந்தியா தனது எல்.பி.ஜி., தேவையில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. 2024 -- 25 நிதியாண்டில், இது 2.07 கோடி டன்னாக இருந்தது. இதில் கிட்டத்தட்ட 90 சதவீதம், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது.

இதற்கு மாற்றாக இருக்கும், பி.என்.ஜி., பெரும்பாலும் மீத்தேன் வாயுவாகும். இதில், 40 - 50 சதவீதம் இந்தியாவின் கிருஷ்ணா -- கோதாவரி பள்ளத்தாக்கு, அசாம், குஜராத் போன்ற இடங்களில் இருந்து கிடைக்கிறது.

மீதம் எல்.என்.ஜி., எனும் திரவநிலை இயற்கை வாயு வடிவில் இறக்குமதி செய்து, மீண்டும் வாயுவாக்கி குழாய்களில் வழங்கப்படுகிறது.

முக்கிய காரணங்கள் அப்படியிருக்க, பி.என்.ஜி., ஏன் இதுவரை பரவலாக பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பு. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

கட்டமைப்பு சிக்கல்கள் முக்கியமானவை. பி.என்.ஜி., வினியோகத்துக்கு, முதலில் ராட்சத குழாய்களை பதிக்க வேண்டும். அதன்பின் நகரங்களில் சிறிய குழாய்கள் வழியாக வீடுகளுடன் இணைக்க வேண்டும். இந்த பணி சாலைகள், ரயில்வே, குடியிருப்புகள், நீர்நிலைகள் போன்ற இடங்களை கடந்து செல்ல வேண்டியிருப்பதால், பல கட்ட அனுமதிகள் தேவைப்படும்.

மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு முறைப்படுத்தும் வாரியமான பி.என்.ஜி.ஆர்.பி., பல பகுதிகளை நிறுவனங்களுக்கு ஒதுக்கியிருந்தாலும், மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி நடைமுறைகள் வேறுபடுவதால், இந்த பணியில் முன்னேற்றம் மந்தமாக உள்ளது. இதன் விளைவாக, பி.என்.ஜி., வளர்ச்சி விகிதம் 2023ம் நிதியாண்டில் 10.60 சதவீதமாக இருந்தது, 2025ல் 2.20 சதவீதமாக குறைந்துள்ளது.

மானியம் எதிர்பார்ப்பு மேலும், ஆரம்ப இணைப்பு கட்டணம் 5,000 முதல் 9,000 ரூபாய் வரை இருக்கும். இதனால் பல குடும்பங்கள் புதிய இணைப்பை தவிர்க்கின்றன. எல்.பி.ஜி., மீது கிடைக்கும் மானியம் பெற்று வரும் வழக்கமும் இதை மேலும் பாதிக்கிறது.

மூன்றாவது காரணம், வணிக லாப சிக்கல். சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், குறைந்த மக்கள் அடர்த்தி காரணமாக, குழாய்கள் அமைப்பதற்கு அதிக செலவாகிறது. ஆனால், வருமானம் குறைவாக இருப்பதால், நிறுவனங்கள் அங்கு விரிவாக்கத்தை தாமதிக்கின்றன. இதன் விளைவாக, பி.என்.ஜி., இணைப்பு இருந்தாலும் சுமார் 40 சதவீத வீடுகளில் அது பயன்படுத்தப்படாமல் உள்ளன.

இந்நிலையில், மத்திய அரசு பி.என்.ஜி., திட்டத்தை விரைவுபடுத்துவதில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது. 1955ம் ஆண்டின் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், 2026ல் புதிய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் வினியோக உத்தரவு வெளியிடப்பட்டது. இதன் வாயிலாக குடியிருப்பு சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை குழாய் அமைப்புகளை தடுக்க முடியாத வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகள், மருத்துவமனைகள், உணவகங்கள் போன்ற இடங்களில், 5 நாட்களுக்குள் பி.என்.ஜி., இணைப்பு வழங்குமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் இலக்கு மிகப்பெரியது; 2034ம் ஆண்டுக்குள் 12 கோடி பி.என்.ஜி., இணைப்புகளை வழங்குவது என அது செயலாற்றி வருகிறது. இது தற்போதைய அளவின் 8 முதல் 9 மடங்கு அதிகம்.

அரசின் நோக்கம் தெளிவாக இருந்தாலும், செயல்படுத்துவது முக்கிய சவாலாக இருக்கும். மேற்காசிய நெருக்கடி உருவாக்கிய பாதிப்பு, நம் நாட்டின் சமையல் எரிவாயு அமைப்பை மாற்றுவதற்கான முக்கிய தருணமாக மாறியுள்ளது. அதுவே, இறக்குமதி சார்பை குறைக்க, திருப்புமுனையாக மாறுமா என்பது இனி தான் தெரியும்.

பி.என்.ஜி., பெரும்பாலும் மீத்தேன் வாயுவாகும். இதில், 40 - 50 சதவீதம் இந்தியாவின் கிருஷ்ணா -- கோதாவரி பள்ளத்தாக்கு, அசாம், குஜராத் போன்ற இடங்களில் இருந்து கிடைக்கிறது. மீதம் எல்.என்.ஜி., எனும் திரவநிலை இயற்கை வாயு வடிவில் இறக்குமதி செய்து மீண்டும் வாயுவாக்கி குழாய்களில் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us