உயர் பாதுகாப்பு 'நம்பர் பிளேட்' பொருத்த... முடிந்தது அவகாசம்!: வாகனங்களுக்கு இன்று முதல் அபராதம் வசூல்
உயர் பாதுகாப்பு 'நம்பர் பிளேட்' பொருத்த... முடிந்தது அவகாசம்!: வாகனங்களுக்கு இன்று முதல் அபராதம் வசூல்
ADDED : செப் 15, 2024 11:01 PM

பெங்களூரு: கர்நாடகாவில் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த கொடுக்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இன்று முதல் வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்க, போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
திருட்டு, குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்கள், வாகனங்களை திருடி, நம்பர் பிளேட்களை மாற்றி பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க, கர்நாடகா அரசு முடிவு செய்தது.
கர்நாடகாவில் 2019 ஏப்ரல் 1ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், 2023 நவ., 17 ம் தேதிக்குள், எச்.எஸ்.ஆர்.பி., எனும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என்று 2023 ஆகஸ்டில், போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது.
இதுவரை கர்நாடகாவில் 55 லட்சம் வாகனங்கள் மட்டுமே இந்த நம்பர் பிளேட்டை பொருத்தி உள்ளன. இன்னும், 1.45 கோடி வாகனங்கள் பொருத்த வேண்டி உள்ளது.
* தாமதம்
எச்.எஸ்.ஆர்.பி., நம்பர் பிளேட் பதிவு இணையத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்னை; நம்பர் பிளேட் பொருத்தும் மையங்களில், நீண்ட வரிசையில் காத்திருப்பு; பிளேட் கிடைப்பதில் தாமதம்; சரியான தகவல் அளித்தும், தவறான பிளேட் வினியோகித்தது.
பழைய வாகனங்கள் பதிவு செய்வதில் பிரச்னை; எச்.எஸ்.ஆர்.பி., குறித்து பொது மக்களிடம் போக்குவரத்து துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்ற பல காரணங்களால் தாதம் ஏற்படுகிறது.
* 4 முறை அவகாசம்
இதை உணர்ந்த போக்குவரத்து துறை, 2024 பிப்., 17 ம் தேதி வரை நீட்டித்தது; அதன் பின், மே 17 வரை நீட்டித்தது. நான்காவது முறையாக, செப்., 15ம் தேதி (நேற்று) வரை நீட்டித்திருந்தது. இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிந்துள்ளதால், இன்று முதல் அபராதம் வசூலிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து துறை கூடுதல் கமிஷனர் மல்லிகார்ஜுனா கூறியதாவது:
மீண்டும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார். எனவே, எச்.எஸ்.ஆர்.பி., நம்பர் பிளேட் இல்லாமல் பயணிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது எச்சரிக்கை விடுதிக்கப்படும். நாளை (இன்று) முதல் போக்குவரத்து போலீசார் சிறப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளனர்.
* எச்சரிக்கை
மாநிலம் முழுதும் வாகனங்கள் அதிகளவில் செல்லும் பகுதிகளில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆன்லைனில் நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பித்தும், இன்னும் நம்பர் பிளேட் கிடைக்காதவர்கள், ஆன்லைனில் பதிவு செய்தததற்கான ரசீதை காட்டினால், அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
அதேவேளையில், மாநிலத்தில் எச்.எஸ்.ஆர்.பி., அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, செப்., 18ம் தேதி வருகிறது. அதுவரை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மூன்று நாட்கள் தளர்வு கிடைத்தாலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து, வாகன உரிமையாளருக்கு அபராதம் அல்லது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு கிடைக்கும். அதேவேளையில், நம்பர் பிளேட் பொருத்துவதில் உற்சாகம் இல்லாததால், இம்முறை அபராதம் விதிக்க, நீதிமன்றம் அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது.
... பாக்ஸ் ...
எச்.எஸ்.ஆர்.பி., என்றால் என்ன?
அனைத்து எச்.எஸ்.ஆர்.பி., பிளேட்களும் ஒரே மாதிரியான எழுத்து, வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். பிளேட்டில் இடது பக்கத்தில் நீல நிற 'சக்கரம்' சின்னம் இருக்கும். வாகனத்தின் வகையை பொறுத்து, சின்னத்தின் பின்னணி நிறம் மாறுபடும்.
உதாரணமாக, தனியார் வாகனங்கள் கருப்பு எண்களுடன், வெள்ளை பின்னணியை கொண்டிருக்கும். அதே நேரத்தில் வணிக வாகனங்கள், மஞ்சள் பிளேட்களை கொண்டிருக்கும். இரண்டு நம்பர் பிளேட்டிலும் 'இந்தியா' என்ற வார்ததை முத்திரையிடப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு எச்.எஸ்.ஆர்.பி.,யும், வாகனத்தின சேசிஸ், இன்ஜின் எண்களுடன் இணைக்கப்பட்ட தனித்துவமான 10 இலக்க எண்ணை கொண்டிருக்கும். இவை, பொருத்தப்படும் மையத்தின் இணையத்தில் சேமிக்கப்படும்.
கார்களுக்கு இரண்டு எண்கள் கொடுக்கப்படும். ஒன்று முன் பக்க நம்பர் பிளேட்டிலும்; மற்றொரு பின் பக்க நம்பர் பிளேட்டிலும் இருக்கும். காரின் கண்ணாடியில் வாகனத்தின் பதிவு தேதி, எண், இரண்டு எச்.எஸ்.ஆர்.பி., அடையாள எண்கள் இடம் பெற்றிருக்கும். இரு சக்கர வாகனங்களில், பின் தட்டில் 10 இலக்க எண் பொறிக்கப்பட்டு உள்ளது. இவைகளுக்கு ஸ்டிக்கர் அல்லது அட்டை வழங்கப்படாது.
-------
புல் அவுட்
எச்.எஸ்.ஆர்.பி., பொருத்த, 2023 ஆகஸ்ட் முதல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே மூன்று முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவகாசம் அளிப்பதற்கும் வரம்பு உண்டு. எனவே, மீண்டும் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை.
ராமலிங்க ரெட்டி,
அமைச்சர், போக்குவரத்து துறை
***