மாட்டு கொழுப்பு விவகாரம்... சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு முதல்வர் சந்திரபாபு உத்தரவு
மாட்டு கொழுப்பு விவகாரம்... சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு முதல்வர் சந்திரபாபு உத்தரவு
UPDATED : செப் 23, 2024 02:36 PM
ADDED : செப் 22, 2024 10:32 PM

விஜயவாடா: திருப்பதி கோயில் லட்டில் மாட்டு கொழுப்பு கலந்த விவகாரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு மீது, தற்போதைய முதல்வர் சந்திரபாபு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகவும், திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது.
இதனிடையே, சாஸ்திர ரீதியாகவும் ஆகம ரீதியாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில்,பரிகார பூஜை செய்வது குறித்து முதல்வர் சந்திரபாபு, தேவஸ்தான நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதேவேளையில், வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் விரதம் இருக்க போவதாக அறிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து தனது விரதத்தை இன்று தொடங்கினார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஐ.ஜி.பி., அடங்கிய சிறப்பு குழு விசாரிக்க இருக்கிறது. இந்தக் குழு, திருப்பதி கோயில் லட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்கும். அதனடிப்படையில், இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். அதன் பிறகு, அனைத்து கோயில்களிலும் நிலையான வழிகாட்டு முறைகளை தயார் செய்வோம், எனக் கூறினார்.