ADDED : அக் 13, 2024 07:40 AM
திருப்பதி : திருப்பதி கோவிலில் நடந்த பிரம்மோற்சவத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும், 30 லட்சம் லட்டுகள் விற்பனையாயின.
ஆந்திராவின் திருப்பதி திருமலையில் அமைந்துள்ளது ஏழுமலையான் கோவில். இங்கு இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம், 4ம் தேதி துவங்கி, நேற்றுடன் முடிந்தது. இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இருப்பினும், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையோ, லட்டு விற்பனையோ குறையவில்லை.
கோவிலை நிர்வகிக்கும் டி.டி.டி., எனப்படும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரம்மோற்சவத்தின் முதல் எட்டு நாட்களில், 15 லட்சம் பக்தர்கள், வாகன சேவைகளை தரிசித்தனர். கருட வாகன சேவையை மட்டும், 3.5 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.
தலா, 50 ரூபாய் மதிப்புள்ள, 30 லட்சம் லட்டுகள், முதல் எட்டு நாளில் விற்பனையாயின. முந்தைய ஆண்டும் இதே அளவுக்கு விற்பனையாயின.
உண்டியல் வசூல், 26 கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட, 2 கோடி ரூபாய் அதிகமாகும். கடந்தாண்டு பிரம்மோற்சவத்தின்போது, 16 லட்சம் பேருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இந்தாண்டு, 26 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.