மாட்டுக் கொழுப்பில் திருப்பதி லட்டு; விஸ்வரூபம் எடுத்தது விவகாரம்; ஆந்திரா அரசியலில் புயல்!
மாட்டுக் கொழுப்பில் திருப்பதி லட்டு; விஸ்வரூபம் எடுத்தது விவகாரம்; ஆந்திரா அரசியலில் புயல்!
ADDED : செப் 20, 2024 01:50 PM

விஜயவாடா: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது; துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பலர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளது.
திருப்பதி வரும் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை அதிகமாக வாங்கி செல்வர். இதற்கென நாளொன்றுக்கு மூன்று லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. லட்டு தயார் செய்வதற்காக மாதம் 42 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.
இச்சூழ்நிலையில், முந்தைய ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். மறுநாள், பிரசாதம் தொடர்பான ஆய்வக அறிக்கையும் வெளியானது. அதில், திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரிய புயலை கிளப்பி உள்ளது.
முதல்வர் அறிக்கை
இதனிடையே அறிக்கை வெளியானதை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முந்தைய ஓய்எஸ்ஆர் அரசு, இழிவுபடுத்திய திருப்பதி கோயிலின் புனிதபடுத்தும் பணியை நாங்கள் துவங்கி உள்ளோம். லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு உள்ளிட்டவற்றை கலப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை நாங்கள் துவக்கி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
மறுப்பு
இந்த குற்றச்சாட்டை மறுத்த ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி, அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த எல்லைக்கும் செல்வார். இந்த குற்றச்சாட்டு குறித்து திருப்பதி கோயிலில் அவர் குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்வாரா? கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையயும், கோவிலின் புனிதத்தையும் அவர் சேதப்படுத்திவிட்டார் எனக்கூறியிருந்தது.
வழக்கு
அக்கட்சி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து பதவியில் உள்ள நீதிபதி அல்லது நீதிமன்றம் நியமிக்கும் குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கூறி அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
விவாதம்
துணை முதல்வர் பவன் கல்யாண் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலப்பது தெரியவந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பாக முந்தைய ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அமைத்த திருப்பதி தேவஸ்தான வாரியம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். தேசிய அளவில், கோவில் தொடர்பான பிரச்னைகளை ஆராய சனாதன தர்மா ரக்ஷனா வாரியம் அமைப்பதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. இது தொடர்பாக கொள்கை வகுப்பாளர்கள், ஆன்மிக தலைவர்கள், நீதித்துறை , பொதுமக்கள் மற்றும் மீடியாக்களில் விவாதம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அச்சம்
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும். ஹிந்து சமூகத்தினர் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் பல ஹிந்துவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறியுள்ளார்
மகாபாவம்
முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறுகையில், திருப்பதியில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தி பிரசாதம் செய்து மகாபாவம் செய்துவிட்டார்கள். பிரசாதத்தின் தரம், சுவை ஆகியவற்றில் குறை உள்ளது என பல முறை தேவஸ்தான நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றோம் என்றார்.
பா.ஜ., கருத்து
இதனிடையே, ஆந்திர மாநில பா.ஜ.,வினர் கூறுகையில், திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்தது என்ற சந்திரபாபுவின் கருத்து ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்தி உள்ளது எனக்கூறியுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விளக்கம்
இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்க தரமற்ற நெய்யை வழங்கியதாக கூறி தடை பட்டியலில் வைக்கப்பட்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி அதிகாரிகள் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: எங்களது நெய்யின் தரத்தை உறுதி செய்ய எந்த ஆய்வுக்கும் உட்படத் தயார். திருப்பதி தேவஸ்தானம் எழுப்பிய கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமாக பதில் அளித்து வருகிறோம். நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை. ஜூன் மாதம் முதல் 4 டேங்கர் லாரி நெய் அனுப்பினோம். டேங்கருக்கு 14 - 16 டன் நெய் இருக்கும். ஜூலை மாதம் அனுப்பிய நெய்யின் தரம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் கேள்வி எழுப்பியது. அதற்கு விளக்கம் அளித்தோம். இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ஜெகன் மோகன் விளக்கம் அளிக்கிறார்
இந்த விவகாரம் தொடர்பாக ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மாலை 3 மணிக்கு நிருபர்களை சந்திக்க உள்ளார்.