திருப்பதி லட்டு விவகாரம்... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு; சிக்கப்போவது யார்?
திருப்பதி லட்டு விவகாரம்... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு; சிக்கப்போவது யார்?
ADDED : செப் 23, 2024 01:20 PM

புதுடில்லி: திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.,வின் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனின் அரசு, திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகவும், திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்தி விட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது. அதேவேளையில், முன்னாள் தேவஸ்தான குழு தலைவர் சுப்பா ரெட்டி, அவதூறு பரப்புவதாக ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனிடையே, முதல்வர் சந்திரபாபுவுடனான ஆலோசனைக்குப் பிறகு, திருப்பதி கோயிலில் பரிகார பூஜைகள் இன்று காலை முதல் நடந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்தப் பூஜைகள் நடத்தப்பட இருக்கிறது.
திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டால், ஹிந்து பக்தர்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதால், இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.