திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு; ஜெகன்மோகன் வீடு முற்றுகை; பா.ஜ., போராட்டம்!
திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு; ஜெகன்மோகன் வீடு முற்றுகை; பா.ஜ., போராட்டம்!
ADDED : செப் 22, 2024 07:01 PM

விஜயவாடா: திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்ததை கண்டித்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டை பா.ஜ.,வினர் முற்றுகையிட்டனர்.
பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பூதாகரமாக எழுந்த இவ்விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேவேளையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு மீது, தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசியல் நோக்கத்திற்காக கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புண்படுத்தியிருப்பதாகவும், இந்த முக்கியமான தருணத்தில் நாடு முழுவதும் உங்களை நம்பியே இருப்பதாகவும், பொய்யான குற்றச்சாட்டுகளை நீக்கி, திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதம் குறித்த அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், விஜயவாடா அருகே உள்ள தாடேபள்ளியில் உள்ள ஜெகன்மோகன் வீட்டை பா.ஜ.,வின் யுவ மோட்சா பிரிவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. அப்போது, திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்ததைக் கண்டித்தும், முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், ஜெகன்மோகனின் சித்தப்பாவுமான சுப்பா ரெட்டிக்கு எதிராகவும் கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.