திருப்பதி லட்டு மவுசு குறையவில்லை நான்கு நாளில் 14 லட்சம் விற்பனை
திருப்பதி லட்டு மவுசு குறையவில்லை நான்கு நாளில் 14 லட்சம் விற்பனை
ADDED : செப் 25, 2024 12:50 AM

திருப்பதி, திருப்பதி லட்டு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையிலும், அதற்கான மவுசு குறையவில்லை. நான்கு நாட்களில் மட்டும், 14 லட்சம் லட்டுகள் விற்றுள்ளன.
லட்டுவில் விலங்கு கொழுப்பு கலப்பு விவகாரம் தொடர்பாக, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, தரமான நெய் பயன்படுத்தப்படுவதாகவும், லட்டுவின் புனித்தன்மை மீட்கப்பட்டுள்ளதாகவும், அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. கோவிலில், தோஷம் நீக்கும் பூஜைகளும் செய்யப்பட்டன.
இந்த விவகாரம் லட்டு விற்பனையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த 19ல், 3.39 லட்சம்; 20ல், 3.17 லட்சம்; 21ல், 3.67 லட்சம்; 22ல், 3.60 லட்சம் லட்டுகள் விற்பனையாகிஉள்ளன.
கோவிலில் ஏற்பட்டுள்ள தோஷத்துக்கு பரிகாரம் தேடும் வகையில், 11 நாட்கள் விரதம் இருப்பதாக, துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் கூறியிருந்தார். இதன்படி, பல கோவில்களுக்கு சென்று துாய்மைப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:
சனாதன தர்மம் குறித்தும், ஹிந்து மதம் குறித்தும் நான் கூறியதற்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். இதில் அவருக்கு என்ன தொடர்பு இருக்கிறது?
மற்ற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் எந்தக் கருத்தையும் நான் கூறவில்லை. மற்ற மதங்களை இழிவுபடுத்தியுள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த பிரகாஷ் ராஜ், 'நான் கூறியதை, நீங்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள்.
நான் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் உங்களுக்கு பதில் அளிக்கிறேன். அதற்குள் ஏற்கனவே நான் தெரிவித்த கருத்தை மீண்டும் படித்து பாருங்கள்' என்றார்.