மம்தா பானர்ஜி தொகுதியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம்
மம்தா பானர்ஜி தொகுதியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம்
ADDED : டிச 17, 2025 03:40 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணிகளை நடத்த திரிணமுல் காங்கிரஸ் முடிவு செய்து இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளை நவ.4ல் தேர்தல் கமிஷன் தொடங்கியது. இப்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 7.66 கோடி பேருக்கு எஸ்ஐஆர் படிவம் வினியோகம் செய்யப்பட்டு, படிவங்கள் பெறப்பட்டன.
பல்வேறு காரணங்களால் 58 லட்சம் படிவங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் இணைய தளத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலின் படி 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. இதற்கு என்று தனியாக பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 24.17 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 12.20 லட்சம் பேர் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
குறிப்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பஹாபனிபுரில் 45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 2025 ஜனவரியில் பஹாபனிபுரில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 295 பேர் ஓட்டு போட தகுதியானவர்களாக உள்ளனர். தற்போது தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 509 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, 45 ஆயிரத்து787 வாக்காளர்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நீக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக, கோல்கட்டா மாநகராட்சியின் 8 வார்டுகள் மம்தாவின் பஹாபனிபுர் சட்டசபை தொகுதிக்குள் வருகிறது. இந்த வார்டுகளில் குறிப்பாக 70, 72 மற்றும் 77 ஆகிய வார்டுகளில் மட்டும் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளது பதிவாகி இருக்கிறது.
அதிக வாக்காளர்கள் நீக்கத்தால் சந்தேகம் கொண்டுள்ள திரிணமுல் காங்கிரஸ், முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சரி பார்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளை களமிறக்கவும், உதவி மையங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த உள்ளூர் நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்திக்கின்றனர்.

