டாக்டர்கள் ஆவதற்கு தகுதியற்றவர்கள்; காவலில் வையுங்கள்: திரிணமுல் எம்.பி., சர்ச்சை பேச்சு
டாக்டர்கள் ஆவதற்கு தகுதியற்றவர்கள்; காவலில் வையுங்கள்: திரிணமுல் எம்.பி., சர்ச்சை பேச்சு
ADDED : செப் 13, 2024 10:39 AM

புதுடில்லி: 'கோல்கட்டாவில் போராட்டம் நடத்தும் டாக்டர்கள் தகுதியற்றவர்கள். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும்' என திரிணமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி தெரிவித்தார்.
கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.,கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் தற்போதும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில் கல்யாண் பானர்ஜி கூறியதாவது: லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரைப் பணயம் வைத்து கடந்த ஒரு மாதமாக டாக்டர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் டாக்டர்களாக இருக்கத் தகுதியற்றவர்கள். இவர்கள் எப்படி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த ஜூனியர் டாக்டர்கள் இறுதித் தேர்வுக்கு வர அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசை நான் வலியுறுத்துகிறேன். மாநிலம் முழுவதும் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் 27 நோயாளிகள் இறந்ததற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களே பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார். திரிணமுல் எம்.பி., பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

