இதெல்லாம் ரொம்ப டூ மச்; பெண் டாக்டர் கொலை வழக்கில் சி.பி.ஐ.,யை கேள்வி கேட்கிறது திரிணமுல்!
இதெல்லாம் ரொம்ப டூ மச்; பெண் டாக்டர் கொலை வழக்கில் சி.பி.ஐ.,யை கேள்வி கேட்கிறது திரிணமுல்!
UPDATED : செப் 06, 2024 11:56 AM
ADDED : செப் 06, 2024 11:41 AM

கோல்கட்டா: பெண் டாக்டர் கொலை வழக்கில் முறையாக செயல்படவில்லை என்று அனைத்து தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சி, 'விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்' என சி.பி.ஐ.,க்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு இன்னும் அடங்கவில்லை. இந்த விவகாரத்தில், மாநில அரசும், போலீசும் சரியாக செயல்படவில்லை என்று கூறி வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைத்தது ஐகோர்ட். இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரின் அதிருப்திக்கும் திரிணமுல் நிர்வாகிகள் ஆளாகியுள்ளனர்.
கொந்தளிப்பு
கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் குடும்பத்தினர், ஒருபடி மேலே சென்று, 'லஞ்சம் கொடுத்து வழக்கை மூடி மறைக்க முயற்சி செய்தனர்' என மாநில போலீசார் மீதே குற்றம் சாட்டியதும் நடந்தது.
குற்றப்பத்திரிகை
இந்த வழக்கில், எல்லோரும் தங்கள் கட்சியையும், ஆட்சியையும் குறை சொல்வதை கண்டு மிரண்டு போயிருக்கிறது திரிணமுல் காங்கிரஸ். அந்த கட்சி இப்போது புதிதாக ஒரு பாயிண்ட் கண்டுபிடித்திருக்கிறது.
'பெண் டாக்டர் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்' என திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்தார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'ஆர்.ஜி.கர் மருத்துவமனை கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் சி.பி.ஐ., எப்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும். எப்போது குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்படும். விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஒரு சில நாட்கள் தாமதம் ஆனால் கூட, அதையும் குற்றம் சொல்லி அரசியல் செய்வதற்கு திரிணமுல் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆளும் கட்சி தவறுகள் நடப்பதற்கு முன் தடுப்பதற்கு தவறிவிட்டது. தற்போது சி.பி.ஐ., பக்கம் தவறுகளை திருப்பி விடுவதற்காக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் என கேள்வி எழுப்பி உள்ளது என்கின்றனர் விவரம் தெரிந்த அரசியல் விமர்சகர்கள்.