ADDED : பிப் 23, 2024 12:47 AM

ஆமதாபாத்: ''பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில், தற்போது உலகளவில், எட்டாவது இடத்தில் உள்ள, 'அமுல்' முதலிடத்தைப் பிடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இதில் மத்திய அரசு தன் அனைத்து உதவிகளையும் வழங்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
குஜராத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின், 50வது ஆண்டு விழா நேற்று நடந்தது. அமுல் என்ற பெயரில், இதன் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சிறந்த உதாரணம்
ஆமதாபாதின் மொடேராவில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர் என, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களிடையே, பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேல் ஆலோசனையின்படி உருவாக்கப்பட்டது தான், கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம். இந்த சங்கம் தான், தற்போது இந்தளவுக்கு வளர்ந்துள்ளது.
ஒரு கூட்டுறவு அமைப்பும், அரசும் இணைந்து எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
இந்த குஜராத் மாடல்தான், உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தி நாடுகளில் நம் நாடு முதலிடத்தைப் பிடிக்க உதவியது.
அமுல் நிறுவனம் தற்போது, உலகின் மிகப் பெரும் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில், எட்டாவது இடத்தில் உள்ளது.
இதை, உலகின் நம்பர் 1 நிறுவனமாக மாற்ற, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்த இலக்கை எட்டுவதற்கு மத்திய அரசு எப்போதும் ஆதரவாக இருக்கும். இது மோடியின் உறுதிமொழி. கடந்த 10 ஆண்டு களில், தனிநபருக்கு பால் கிடைப்பது, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகெங்கும் பால் பொருட்கள் துறையின் வளர்ச்சி, 2 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது, 6 சதவீதமாக உள்ளது.
நம் நாட்டின் மொத்த பால் பொருட்கள் உற்பத்தியின் அளவு, 10 லட்சம் கோடி ரூபாயாகும். இது, அரிசி, கோதுமை, கரும்பின் ஒட்டுமொத்த உற்பத்தியைவிட அதிகமாகும்.
வளர்ந்த நாடு
இந்த பால் பொருட்கள் துறையில் ஈடுபட்டுள்ளவர்களில், 70 சதவீதம் பேர் பெண்கள். பெண்களின் சிறந்த பங்களிப்பே, அமுல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். நம் நாடு வளர்ந்த நாடாக உயர்வதற்கு, பெண்களுக்கு பொருளாதார சக்தி அளிக்க வேண்டும். இதைத்தான், அமுல் செய்து வருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பின் உருவான நிறுவனங்களில், மிகவும் பிரலமான ஒன்று அமுல். இதன் பொருட்கள்,50 நாடுகளில் விற்கப்படுகின்றன.
மொத்தம், 36 லட்சம் விவசாயிகள், 18,000 கூட்டுறவு சங்கங்கள், நாளொன்றுக்கு, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.5 கோடி லிட்டர் பால் கையாள்வது என, அமுலின் வளர்ச்சி அபாரமானது.
முன்பெல்லாம் கிராமங்களுக்கு துண்டு துண்டாகாவே, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வந்தனர். ஆனால், எங்கள் அரசு, ஒட்டுமொத்த விவசாயிகள், கிராமங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
கிராமப் பொருளாதாரம் வலுவாக இருப்பதே, நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். இதன்படி, பால் உற்பத்திக்கு முக்கியத்துவம் தருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ஐந்து புதிய பால் பொருட்கள் உற்பத்தி திட்டங்களையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். குஜராத்தின் மேஷானா மாவட்டத்தில், வாலிநாத் மகாதேவ் கோவிலையும் பிரதமர் திறந்து வைத்தார்.
மோடி, அங்கு நடந்த விழாவில், 8,350 கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்களை துவக்கி வைத்தார்.