தேசிய அளவில் பெருமை பெற வேண்டும்; தங்கவயல் போலீசாருக்கு கலெக்டர் வாழ்த்து
தேசிய அளவில் பெருமை பெற வேண்டும்; தங்கவயல் போலீசாருக்கு கலெக்டர் வாழ்த்து
ADDED : நவ 29, 2024 12:09 AM
தங்கவயல்; ''தங்கவயல் போலீசார், விளையாட்டில் தேசிய அளவில் பெருமை பெற வேண்டும்,'' என்று கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா வாழ்த்தினார்.
தங்கவயல் போலீஸ் மாவட்ட விளையாட்டு விழா நேற்று துவங்கியது. இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது. தங்கவயல் சாம்பியன் ரீப் ரிசர்வ் போலீஸ் படை அணிவகுப்பு திடலில் நடந்த விழாவில், எஸ்.பி., சாந்தராஜு வரவேற்றார்.
புறாக்களை பறக்க விட்ட கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா, விளையாட்டு வீரர் கொண்டு வந்த ஜோதியை பெற்றார்; அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
24 மணி நேரம்
விழாவில் அவர் பேசியதாவது:
கோலார் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது. பாதிப்பு ஏற்படாமல் 24 மணி நேரமும் போலீசார் கடமையை செய்து வருகின்றனர். மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கவும், சிக்னல்கள் அமைக்கவும் கவனம் செலுத்தப்படுகிறது. கோலார் மாவட்டம் முழுதும் டிராபிக்கை மேம்படுத்த வேண்டும்.
கோலாரில் போலீசார் குடியிருப்புகளுக்கு குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் 1,950 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் 1,700ல் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. 2,100 சொத்துகளுக்கு இ- - பட்டா வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி மையம்
தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில், போலீஸ் பயிற்சி மையம் அமைக்க, 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்படுகிறது. மாவட்ட வருவாய் துறை, மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து உள்ளது. விளையாட்டுத் துறையில் போலீசார் ஆர்வமாக உள்ளனர். பாராட்டுகிறேன். தாலுகா, மாவட்ட அளவிலும் தங்கவயல் போலீஸ் மாவட்டம் இடம் பெற்று சாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பசுமை மயம்
எஸ்.பி., சாந்தராஜு பேசுகையில், ''தங்கவயல் நகராட்சி வாயிலாக, போலீசாருக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய பவன் கட்டப்படுகிறது. மகளிருக்கு குடிநீர், வடிகால், கழிப்பறை வசதி அமைக்கப்பட்டு உள்ளது. விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். அவரவர் திறமைகளை வெளி கொணரும் விழாவாக அமைந்துள்ளது. காலியான இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்கப்படும்,'' என்றார்.