கர்நாடக தேவர் சங்கம் சார்பில் இன்று தேவர் ஜெயந்தி, குரு பூஜை
கர்நாடக தேவர் சங்கம் சார்பில் இன்று தேவர் ஜெயந்தி, குரு பூஜை
ADDED : அக் 27, 2024 10:56 PM
பெங்களூரு: கர்நாடக தேவர் சங்கம் சார்பில், பெங்களூரு ஹலசூரில் இன்று தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை கொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக, சங்கத் தலைவர் சுப்பையா தேவர், செயலர் அண்ணாதுரை தேவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக தேவர் சங்கம் சார்பில், பெங்களூரு ஹலசூரு அண்ணாசாமி முதலியார் சாலையில் உள்ள பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் இன்று பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை கொண்டாடப்படுகிறது.
மாலை 3:30 மணி முதல், திருவள்ளுவர் சிலை முன், சிலம்பாட்டத்துடன் முளைப்பாரி எடுத்து, தமிழ்ச் சங்கம் வரை ஊர்வலமாக வருதல். மாலை 5:05 மணிக்கு, இறை வணக்கத்துக்கு பின், குத்துவிளக்கு ஏற்றி விழா துவக்கி வைக்கப்படும். பின், தேவர் குரு பூஜை செய்யப்படும்.
தேவராட்டம், சிலம்பாட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கே.டி.எஸ்., வங்கித் தலைவர் ஞானகுரு தேவர், வரவேற்புரை ஆற்றுவார். சங்கத் தலைவர் சுப்பையா தேவர், தலைமையுரை ஆற்றுவார்.
பின், பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் கவுரவிக்கப்படுவர். முன்னாள் தலைவர்கள் வீரையா தேவர், மணிகண்டன் தேவர், பெங்., மாநகராட்சி முன்னாள் கல்வி நிலைக் குழுத் தலைவர் தன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துவர்.
முளைப்பாரி, சிலம்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கவுரவிக்கப்படுவர். உப தலைவர் மகேந்திரன், நன்றி கூறுகிறார். இறுதியாக தேசிய கீதத்துடன் விழா நிறைவுபெறும். இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.