இன்று தேசிய அறிவியல் தினம் பள்ளி, கல்லுாரிகளில் உறுதிமொழி
இன்று தேசிய அறிவியல் தினம் பள்ளி, கல்லுாரிகளில் உறுதிமொழி
ADDED : பிப் 28, 2024 06:06 AM

பெங்களூரு : தேசிய அறிவியல் தின விழாவின் ஒரு பகுதியாக, மாநிலத்தின் அனைத்துப் பள்ளி, கல்லுாரிகளிலும் உறுதிமொழி ஏற்பு விழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
விஞ்ஞானி சர் சி.வி.ராமனின், ராமன் விளைவு கண்டுபிடித்த பிப்ரவரி 28ம் தேதி, 1987 முதல் தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், அறிவியல் மீது ஆர்வத்தை துாண்டும் வகையில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்தாண்டு நிகழ்ச்சிகள் குறித்து, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் போசராஜு, நேற்று வெளியிட்ட அறிக்கை:
தேசிய அறிவியல் தினத்தின் ஒரு பகுதியாக, பெங்களூரு ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் மாநில அளவிலான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பர்.
இன்று காலை 11:00 மணிக்கு, முதல்வர் சித்தராமையா, மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை மற்றும் மனிதாபிமான மாண்புகளை கடைபிடிப்பது தொடர்பாக உறுதிமொழி போதிப்பார்.
அதே நேரத்தில், இந்த உறுதிமொழியை மாநிலத்தின் அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும் ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு கற்பிக்க பள்ளி கல்வி துறை மற்றும் கல்லுாரி கல்வி துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முற்போக்கான சமுதாயத்தையும், வளமான நாட்டையும் கட்டி எழுப்புவதில் அறிவியலும், தொழில்நுட்பமும் முக்கிய பங்காற்றி உள்ளன. சமூகத்தில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டும் பின்னணியில் பொதுமக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

