16 மணி நேர போராட்டத்துக்கு வெற்றி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு
16 மணி நேர போராட்டத்துக்கு வெற்றி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு
UPDATED : செப் 19, 2024 02:40 PM
ADDED : செப் 19, 2024 11:24 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தவுசா அருகே ஜோத்புரியாவில் 20 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை, 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் ஜோத்புரியாவில் பாண்டூகி என்ற இடத்தில், நேற்று மாலை 6 மணியளவில் இரண்டரை வயது பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. பெற்றோர் குழந்தை விளையாடி கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தில் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து, குழந்தையை காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது நேரம் போராடியும் எடுக்க முடியாமல் போன நிலையில், போலீசார், தீயணைப்பு படையினரை நாடினர்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நவீன கருவிகள் உதவியுடன் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 16 மணி நேரமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இன்று (செப்., 19) காலை 11 மணிக்கு குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை மீட்டதும் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்; மீட்பு படையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்ததும், ஒட்டு மொத்த கிராமத்தினரும் சேர்ந்து மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.