கழிப்பறைக்கு வரியா... என்ன கொடுமை சார் இது...! சர்ச்சையில் சிக்கி சரண்டரான இமாச்சல் அரசு
கழிப்பறைக்கு வரியா... என்ன கொடுமை சார் இது...! சர்ச்சையில் சிக்கி சரண்டரான இமாச்சல் அரசு
ADDED : அக் 04, 2024 03:08 PM

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிப்பறைக்கு வரி கட்ட வேண்டும் என்ற தகவல்களில் உண்மை இல்லை என்று மாநில அரசு மறுத்துள்ளது.
ஒரு அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றால் வரி மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய ஆதாரம். வரி இல்லை என்றால் அரசு இயந்திரம் அவ்வப்போது மக்கர் செய்துவிடும் என்பது பொருளாதார நிபுணர்களின் கூற்று. மக்களை பாதிக்காத வகையில் வரிகளை அறிவித்து நடைமுறைப்படுத்துவது அரசின் நேரடி பார்வையில் இருக்கும் அதிகாரிகளே.
எத்தனையோ வரிகளை அமல்படுத்தி இருப்பதை பார்த்து இருப்போம், கேட்டிருப்போம். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் நூதன வரி ஒன்றை அம்மாநில அரசு வசூலிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. அதை கழிப்பறை வரி என்று கூறலாம். அதாவது, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் எத்தனை கழிப்பறைகள் வைத்துள்ளனரோ, அத்தனைக்கும் வரி செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
இதுவரை இல்லாத கடும் பொருளாதார நெருக்கடியை காங்கிரஸ் அரசு ஆளும் இமாச்சல பிரதேச மாநில அரசு சந்தித்துள்ளது. அதை எதிர்கொள்ளும் பொருட்டு அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அரசு ஒரு முக்கிய அறிவிக்கையை வெளியிட்டு இருக்கிறது. வீட்டில் கட்டப்படும் ஒவ்வொரு கழிப்பறைக்கும் தலா ரூ.25ஐ வரியாக செலுத்த வேண்டும்.
இந்த வரியானது ஏற்கனவே செலுத்தி வரும் கழிவுநீர் வடிகால் கட்டணத்துடன் சேர்க்கப்படும். பின்னர் அந்த தொகை ஜல்சக்தி துறைக்கு செலுத்தப்படும். கழிவறைக்கு வரி என்ற இந்த புதிய நடைமுறையை பா.ஜ., கண்டித்துள்ளது.
இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது எதிர்ப்பை எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
நம்பவே முடியவில்லை, இது உண்மைதானா. பிரதமர் மோடி நாடு முழுவதும் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஆனால், காங்கிரஸ் அரசு கழிப்பறைகளுக்கான கட்டணத்தை கொண்டு வந்திருக்கிறது. நாட்டுக்கு மிகவும் அவமானகரமான ஒன்று.
இவ்வாறு அவர் தமது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இதனிடையே கழிப்பறை வரி குறித்த செய்திகளில் எவ்வித உண்மை இல்லை என்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது. அதில் எவ்வித உண்மையும் இல்லை. அத்தகைய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இதையும் விமர்சித்துள்ள எதிர்க்கட்சிகள், கடும் எதிர்ப்பால் கழிப்பறை வரி விவகாரத்தில் பல்டி அடித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளன.

