உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூல் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்
உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூல் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்
ADDED : டிச 17, 2024 04:42 AM
ஹாசன்: சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்க இருப்பதை கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
ஹாசன், ஆலுார் தாலுகா, சவுலகெரே கிராமம் வழியாக பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலை - 75 செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில், சவுலகெரேயில் நேற்று புதிய சுங்கச்சாவடி நிறுவப்பட்டது.
இந்த சுங்கச்சாவடியில், ஹாசனில் - மங்களூரு வாகனங்கள்; மங்களூரு - பெங்களூரு வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் வழியாக பயணிக்கும் உள்ளூர் மக்களும் மாதம் தோறும் 340 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து, நேற்று காலை 8:00 மணியளவில், வாகன ஓட்டிகள், உள்ளூர் வாசிகள், கன்னட அமைப்பினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் பிரவீன்குமார், ஹாசன் எஸ்.பி., முகமது சுஜிதா, சக்லேஸ்பூர் உதவி ஆணையர் ஸ்ருதி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு நடத்தினர்.
கர்நாடக ரக் ஷனா வேதிகே ஹாசன் தலைவர் ரகு கூறுகையில், ''சாலைகள் மேடு, பள்ளங்களாக காட்சி அளிக்கின்றன. இன்னும் சரியாக சீரமைக்கப்படவில்லை.
விதிமுறைப்படி சுங்கச்சாவடிகள் 50 முதல் 60 கி.மீ., இடைபட்ட துாரத்தில் இருக்க வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி சவுலகெரே சுங்கச்சாவடி, சாந்தி கிராமம் சுங்கச்சாவடியில் இருந்து வெறும் 30 கி.மீ., துாரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, சுங்க கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்,'' என்றார்.
முதலில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு தேசிய நெடுஞ்சாலை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மதியம் வரை போராட்டம் தீவிரம் அடைந்ததால், தற்காலிகமாக கட்டணம் வசூலிக்கப்படாது; நாளை (இன்று) கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு நடத்தலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

