கம்பத்தில் கட்டி வைத்து ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்
கம்பத்தில் கட்டி வைத்து ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்
UPDATED : ஆக 19, 2025 01:11 AM
ADDED : ஆக 19, 2025 01:10 AM

மீரட்: உ.பி.,யின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில் கவாட். ராணுவ வீரரான இவர், விடுமுறைக்காக மீரட்டில் உள்ள சொந்த கிராமத்திற்கு சமீபத்தில் வந்தார்.
விடுமுறை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு டில்லி விமான நிலையத்திற்குச் சென்று, பின் அங்கிருந்து, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்ல அவர் திட்ட மிட்டிருந்தார்.
விமானத்துக்கு தாமதமாகி விடும் எனக் கருதிய ராணுவ வீரர் கபில் கவாட், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ராணுவ அடையாள அட்டையை காண்பித்து வழிவிடும்படி கேட்டார். ஆனால், சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
பின், கபில் கவாட்டை கம்பத்தில் கட்டி வைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் உருட்டுக்கட்டைகளால் அடித்து உதைத்தனர்.
இதையறிந்த உள்ளூர் மக்கள், புனி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மக்கள், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நிலைமையை கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தால் புனி சுங்கச்சாவடி தற்காலிகமாக மூடப்பட்டது.
வழக்கு பதிந்த போலீசார், ராணுவ வீரர் கபில் கவாட்டை தாக்கியதாக ஆறு சுங்கச்சாவடி ஊழியர்களை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தை விசாரித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புனி சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. எதிர்காலத்தில் சுங்கச்சாவடி ஏலத்தில் பங்கேற்கவும் அந்நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.