சின்ன தப்பு நடந்து போச்சு; சலுகை டிக்கெட் அறிவித்து ஜகா வாங்கியது விமான நிறுவனம்
சின்ன தப்பு நடந்து போச்சு; சலுகை டிக்கெட் அறிவித்து ஜகா வாங்கியது விமான நிறுவனம்
UPDATED : ஆக 28, 2024 11:17 AM
ADDED : ஆக 28, 2024 11:03 AM

புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமான பயணத்துக்கு, 85 சதவீத தள்ளுபடியில் ஆன்லைனில் டிக்கெட் வெளியிட்டது குவாண்டாஸ் நிறுவனம்; பலர் முன்பதிவு செய்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு என்று ஜகா வாங்கி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குவாண்டாஸ் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய, ரூ.9,24,000 ( $19,000) கட்டணமாகும். ஆனால் சில நாட்களுக்குமுன் திடீரென, கட்டணம் ரூ.2,85,600 ($3,400) என ஆன்லைனில் டிக்கெட் வெளியாகி உள்ளது.
இதை பார்த்த பயணிகள் கட்டண தள்ளுபடி என நினைத்து உற்சாகம் அடைந்து முன்பதிவு செய்தனர். 300 பயணிகள் 85 சதவீத தள்ளுபடியில் டிக்கெட் புக் செய்துள்ளனர். இதனால் ஒரு பயணிக்கு ரூ.7 லட்சம் வரை லாபம் கிடைத்துள்ளது.
விமான நிர்வாகம் சொல்வது என்ன?
இது தொடர்பாக, குவாண்டாஸ் விமான நிர்வாகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தொழில்நுட்ப கோளாறு காரணமாக முன்பதிவு பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். முன்பதிவு குறித்த முக்கியமான அறிவிப்புடன் உங்களைத் தொடர்பு கொள்கிறோம். இந்த தவறுக்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த கட்டணம் உண்மையில் மிகவும் நன்றாக இருந்தது. இருப்பினும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. 85 சதவீதம் சலுகை கட்டணத்தில் முன்பதிவு செய்தவர்கள், டிக்கெட் ரத்து செய்வதற்குப் பதிலாக, பிசினெஸ் வகுப்பில் கூடுதல் கட்டணமின்றி மீண்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பிசினெஸ் வகுப்பில் திருப்தி இல்லை என்றால், பயணிகள் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல் வகுப்பு கட்டணம், 19 ஆயிரம் டாலர், பிசினெஸ் வகுப்பு கட்டணம் 11 ஆயிரம் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.குவான்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், இப்படி குளறுபடி செய்வது இது முதல் முறையல்ல என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

