ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் விளக்கிய இந்திய ராணுவம்!
ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் விளக்கிய இந்திய ராணுவம்!
UPDATED : மே 13, 2025 10:44 PM
ADDED : மே 13, 2025 10:30 PM

புதுடில்லி: ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் கிடைத்த வெற்றி குறித்து, 70 நாடுகளிடம், ராணுவ உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ' ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் , 40 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.9 பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாகிஸ்தான் விமானப்படை தளங்களும் சேதம் அடைந்தன. பாகிஸ்தான் டிஜிஎம்ஓ கெஞ்சியதை தொடர்ந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், டில்லியில் 70க்கும் மேற்பட்ட நாட்டு பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ' ஆபரேஷன் சிந்தூர்' குறித்தும், அதன் செயல்பாடு மற்றும் வெற்றி குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
டில்லியன் கண்டோன்மென்ட்டில் மானேக்ஷா மையத்தில், ராணுவ லெப்டின்ன்ட் ஜெனரல் டிஎஸ் ராணா, இந்த நடவடிக்கை குறித்துவிளக்கம் அளித்தார். சுவீடன், நேபாளம், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் இஸ்லாமிய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில், பயங்கரவாத முகாம்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்தும், தாக்குதல் குறித்தும் விளக்கப்பட்டது. இந்தியாவிற்கு எதிராக நடந்து வரும் பிரசாரம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.