முதல்வர் பெயரை கூறும்படி 'டார்ச்சர்' ; அமலாக்க துறை மீது நாகேந்திரா புகார்
முதல்வர் பெயரை கூறும்படி 'டார்ச்சர்' ; அமலாக்க துறை மீது நாகேந்திரா புகார்
ADDED : அக் 16, 2024 10:26 PM

பெங்களூரு : வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் நாகேந்திரா நேற்று, சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். விசாரணையின் போது, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் பெயரை கூற சொல்லி, அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தியதாக, நாகேந்திரா கூறினார்.
கர்நாடக பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்ட, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் 94 கோடி ரூபாய் முறைகேடு நடந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் நாகேந்திராவை, அமலாக்கத் துறை கைது செய்தது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு, கடந்த 14ம் தேதி ஜாமின் கிடைத்தது. சிறையில் இருந்து நேற்று காலை விடுவிக்கப்பட்டார்.
அழுத்தம்
சிறை வாசலில் அவர் அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த, குற்றப்பத்திரிகையில் எனது பெயர் இல்லை. ஆனால் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் எனது பெயர் உள்ளது.
பா.ஜ., தலைவர்களின் அழுத்தத்தால், என்னை கைது செய்தனர். டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா ஆகியோரையும், பா.ஜ., அழுத்தத்தால், அமலாக்கத் துறை கைது செய்தது.
அமலாக்கத் துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை, பா.ஜ., குறி வைக்கிறது. எங்களின் ஒரே நம்பிக்கையாக இப்போது நீதிமன்றம் மட்டும் உள்ளது.
விசாரணையின் போது முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கும், வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் தொடர்பு உள்ளது என்று, என்னை வாக்குமூலம் அளிக்கும்படி, அமலாக்கத் துறை அதிகாரிகள் துன்புறுத்தினர்.
கோட்டை
எனக்கே, முறைகேட்டில் தொடர்பு இல்லை. நான் ஏன் முதல்வர், துணை முதல்வர் பெயரை கூற வேண்டும் என்று கேட்டேன். ஆனால், சொல்லியே ஆக வேண்டும் என்று, 'டார்ச்சர்' செய்தனர்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டுக்கு, வங்கி அதிகாரிகள் தான் காரணம். அவர்கள் செய்த முறைகேடு பற்றி, எங்கள் கவனத்திற்கு வரவே இல்லை.
முடா வழக்கிலும் முதல்வர் சித்தராமையா மீது தவறு இல்லை.
ஆனால் அவர் பதவி விலக கோரி, பெங்களூரில் இருந்து மைசூரு வரை பாதயாத்திரை நடத்தி, பா.ஜ.,வினர் நாடகம் போட்டனர்.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், அரசை கவிழ்க்க பா.ஜ., முயற்சி செய்கிறது. என் மூலம் கர்நாடக அரசை கவிழ்க்க முயற்சி நடந்தது.
பா.ஜ.,வுக்கு தற்போது 66 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வரும் நாட்களில் 40 எம்.எல்.ஏ.,க்கள் ஆக குறையும்.
இடைத்தேர்தல் நடக்கும் சென்னப்பட்டணா, சண்டூர், ஷிகாவியில் காங்கிரஸ் வெற்றி பெறும். சண்டூரில் வெற்றி பெற்று, பல்லாரியை காங்கிரஸ் கோட்டை என்று நிரூபித்து காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.