கேமராக்கள் முன் அரசியல் அமைப்பு சட்டத்தை தொடும் பாசாங்கு; ராகுல் விமர்சனம்
கேமராக்கள் முன் அரசியல் அமைப்பு சட்டத்தை தொடும் பாசாங்கு; ராகுல் விமர்சனம்
UPDATED : செப் 08, 2024 09:30 AM
ADDED : செப் 08, 2024 08:27 AM

புதுடில்லி: 'உங்கள் சொந்த அரசுகள், அரசியலமைப்புச் சட்டத்தை துண்டு துண்டாக கிழிக்கும்போது, கேமராக்களின் முன்பாக அதை தொடுவதெல்லாம் வெறும் பாசாங்குத்தனமே' என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறினார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் மீறுகிறார்கள். தற்போது சுல்தான்பூரில் நடந்த மங்கேஷ் யாதவ் என்கவுன்டர், பா.ஜ.,வுக்கு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அவரது குடும்பத்தின் கண்ணீர் கேட்கிறது. யார் வாழ வேண்டும், யார் வாழ மாட்டார்கள் என்பதை நீதிமன்றமோ அல்லது போலீசாரோ தீர்மானிக்குமா?
பாரபட்சமின்றி விசாரணை
எஸ்.டி.எப்., போன்ற நிபுணத்துவப் படைகள் பா.ஜ., அரசின் கீழ் கிரிமினல் கும்பல் போல் நடத்தப்படுகின்றன. இது குறித்து மத்திய அரசு மவுனம் சாதிப்பதுதான். அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களை யார் காப்பாற்றுகிறார்கள், ஏன்?
அரசியலமைப்பு சட்டத்தை கேமராக்களுக்கு முன்னால் காட்டுவது வெறும் பாசாங்குத்தனம். உத்தரபிரதேசத்தில் நடந்த அனைத்து சந்தேகத்திற்கிடமான என்கவுன்டர்களையும் பாரபட்சமின்றி விசாரித்து நீதி வழங்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.