சவனதுர்காவில் மலையேற்றம் சுற்றுலா பயணியருக்கு அனுமதி
சவனதுர்காவில் மலையேற்றம் சுற்றுலா பயணியருக்கு அனுமதி
ADDED : டிச 20, 2024 05:50 AM

ராம்நகர்: சவனதுர்காவில் மலையேற்றம் செல்ல, நான்கு மாதங்களுக்கு பின், சுற்றுலா பயணியருக்கு, வனத்துறை அனுமதி அளித்து உள்ளது.
ராம்நகரின் மாகடி அருகே ஒற்றை பாறை மலை என்று அழைக்கப்படும் சவனதுர்கா மலை உள்ளது. இங்கு சுற்றுலா பயணியர் மலையேற்றம் மேற்கொண்டு வந்தனர். மலையேற்றம் செல்வோரை வன ஊழியர்கள் அழைத்து செல்வர்.
இந்நிலையில், இங்கு ஏராளமானோர் சட்டவிரோதமாக மலையேற்றம் சென்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மலையேற்றம் செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது மலையேற்றம் மேற்கொள்வதற்கு, வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
வார நாட்களில் மலையேற்றம் மேற்கொள்ள ஒரு நபருக்கு 300 ரூபாய், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் 400 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வார நாட்களில் 150; வார இறுதி நாட்களில் 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே மலை ஏற்றம் செல்ல அனுமதி உண்டு. தினமும் காலை 6:00 முதல் காலை 10:00 மணி வரை ஒரு சுற்றும்; தினமும் காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இன்னொரு சுற்றும் மலையேற்றம் செல்லலாம். மலையேற்றம் செல்வோர் www.aranavihaara.com என்ற இணைய செயலியில் முன்பதிவு செய்யலாம்.
மாகடி வன அலுவலர் சைத்ரா கூறியதாவது:
சவனதுர்காவில் மலையேற்றம் செல்ல சுற்றுலா பயணியருக்கு நான்கு மாதம் கழித்து அனுமதி கொடுத்துள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மலையில் ஏறி அழகான அனுபவத்தை பெறலாம்.
இதற்காக புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். முன்பதிவு செய்யும்போது பெயர், வயது, முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இதனால் சட்ட விரோதமாக மலையேற்றம் செல்வது தவிர்க்கப்படும். வழிகாட்டிகளும் உடன் வருவர். வழி தெரியாமல் தொலைந்து போகும் என்ற அச்சம் இனிமேல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.