ADDED : ஏப் 01, 2025 09:15 PM

மூணாறு:கேரள மாநிலம் இரவிகுளம் தேசிய பூங்கா நேற்று திறக்கப்பட்டது. இரு மாதங்களுக்கு பின், ராஜமலைக்கு செல்ல சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள இரவிகுளம் தேசிய பூங்கா, 97 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. அபூர்வ இன வரையாடு ஏராளமாக இந்தப் பூங்காவில் பராமரிக்கப்படுகின்றன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலை பகுதிக்கு மட்டும் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆண்டு தோறும் வரையாடுகளின் பிரசவத்துக்காக பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் பூங்கா மூடப்பட்டு, சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்படும். அதன்படி, இரு மாதங்களாக பூங்கா மூடப்பட்டிருந்த பூங்கா, நேற்று திறக்கப்பட்டது.
ராஜமலைக்கும் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர். புதிதாக பிறந்த ஏராளமான வரையாடு குட்டிகள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தன.