மூணாறில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்; அறைகள் கிடைக்காமல் திண்டாட்டம்
மூணாறில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்; அறைகள் கிடைக்காமல் திண்டாட்டம்
ADDED : ஏப் 14, 2025 03:41 AM

மூணாறு : கேரள மாநிலம் மூணாறில் தொடர் விடுமுறையால் குவிந்த சுற்றுலாப்பயணிகள் போதிய அறைகள் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.
மூணாறில் கோடை சுற்றுலா சீசன் துவங்கியும் கேரளா தவிர தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்காததால் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில் வார விடுமுறை, இன்று (ஏப்.14) தமிழ் புத்தாண்டு, கேரளாவில் விஷூ பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர் விடுமுறையை கொண்டாட மூணாறில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ராஜமலை, மாட்டுபட்டி, எக்கோ பாய்ன்ட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகள் களை கட்டின.
நெரிசல்:பயணிகள் வருகை அதிகரிப்பால் மூணாறு நகர் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அதனால் சுற்றுலாப்பயணிகள் திட்டமிட்டபடி பயணத்தை தொடர இயலவில்லை.
திண்டாட்டம்:ஏப்.,12 முதல் இன்று (ஏப்.,14) வரை தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதால் முன்பதிவு செய்யாமல் வந்த பயணிகள் அறைகள் கிடைக்காமல் திண்டாடினர்.
அதிகரிப்பு:மூணாறில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட தங்கும் விடுதிகள் தவிர பிற தங்கும் விடுதிகளில் அறைகளின் கட்டணம் சீசனை பொறுத்து வசூலிக்கப்படுகிறது. தற்போது பயணிகள் வருகை அதிகரித்ததால் அறைகளின் கட்டணமும் பல மடங்கு அதிகரித்தது. அதனால் 'பட்ஜெட்' போட்டு, சுற்றுலா வந்த பயணிகள் சுற்றுலாவை பாதியில் முடித்து விட்டு ஏமாற்றத்துடன் சொந்த ஊர் சென்றனர்.