மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு
ADDED : ஆக 17, 2025 02:07 AM

மூணாறு:தொடர் விடுமுறையால் மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள் மழை, போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
கேரளா இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று மதியம் முதல் கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' வானிலை ஆய்வு மையம் விடுத்தது. இன்று பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' விடுத்துள்ளது. மூணாறில் நேற்று முன்தினம் மழை கொட்டித் தீர்த்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி மூணாறில் 15 செ.மீ., மழை பதிவானது.
பயணிகள் குவிந்தனர் மூணாறில் கொட்டிய மழையை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுதந்திர தினம், தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வருகை அதிகரித்தது. வாகனங்களை விட்டு இறங்க இயலாத வகையில் பலத்த மழை பெய்ததால் பயணி கள் சுற்றுலா பகுதிகளை பார்க்க இயலாத நிலை ஏற்பட்டது.
மூணாறு நகர், மாட்டு பட்டி, எக்கோ பாய்ன்ட், கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை உட்பட அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது. அதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல நேரிட்டதால் பல கி.மீ., தொலைவுக்கு அணிவகுத்து நின்றதால் தவித்தனர்.