ADDED : டிச 25, 2024 02:47 AM

மூணாறு:மூணாறில் குளிர் நேற்று அதிகரித்து பல பகுதிகளில் உறைபனி ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மூணாறில் ஆண்டு தோறும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி விடும் என்றபோதும், இந்தாண்டு 'பெஞ்சல்' புயல், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால், குளிர் போக்கு காட்டி வந்தது. காலை வேளையில் குறைந்தபட்ச வெப்பம் 7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. டிச.22ல் காலையில் குறைந்தபட்ச வெப்பம் 8, நேற்று முன்தினம் 10 டிகிரி செல்சியஸ் பதிவானது.
இந்நிலையில் மூணாறை சுற்றியுள்ள கன்னிமலை, குண்டளை, செண்டுவாரை, தேவிகுளம் உள்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் நேற்று காலை குறைந்தபட்ச வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உறைபனி ஏற்பட்டது. அதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உள்ளூர் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு இதே நாளில் காலை வேளையில் வெப்பம் 7 டிகிரியாகவும், 2022ல் 'ஜீரோ' டிகிரியாக குறைந்து உறைபனியும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

