சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் மோதல்: 9 பேர் பலத்த காயம்
சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் மோதல்: 9 பேர் பலத்த காயம்
ADDED : செப் 21, 2024 12:49 AM
மூணாறு:மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட்டில் நுழைவு கட்டணம் தொடர்பாக சுற்றுலா பயணிகள், ஹைடல் சுற்றுலா ஊழியர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 30 பேர் குழு மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மாட்டுபட்டியில் எக்கோ பாய்ண்ட் பகுதிக்கு சென்றனர். அங்கு மின்வாரியத்தின் ஹைடல் சுற்றுலா சார்பில் இயக்கப்படும் பெடல் படகில் பயணம் செய்ய கட்டணம் செலுத்தியபோது, நுழைவு கட்டணம் தலா ரூ.10 வழங்குமாறு ஊழியர்கள் கேட்டனர். அதனை தர மறுத்த சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கு செலுத்திய கட்டணத்தை திரும்ப கேட்டனர். அதனை வழங்க இயலாது என ஊழியர்கள் கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
இரு தரப்பினரும் பலமாக தாக்கிக் கொண்டனர். அதில் சுற்றுலா பயணிகள் அப்ஷல் 32, அவரது சகோதரர் ஆன்ஷில் 28, உறவினர்கள் நஜ்மா 62, அஜ்மி 16, ஷஹாலுதீன் 58, அன்ஷாப் 29, ஷாஹினா 22, மற்றும் ஹைடல் சுற்றுலா ஊழியர்கள் பாலமுருகன் 52, ஆனந்த் 30, பலத்த காயம் அடைந்தனர். மூணாறு டாடா மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.