விஷவாயு பாதிப்புக்கு காரணமான போபால் ஆலை நச்சுக்கழிவு; 40 ஆண்டுக்குப் பிறகு அகற்றம்
விஷவாயு பாதிப்புக்கு காரணமான போபால் ஆலை நச்சுக்கழிவு; 40 ஆண்டுக்குப் பிறகு அகற்றம்
ADDED : ஜன 02, 2025 08:03 AM

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து பிதாம்பூர் என்ற இடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் 12 கண்டெய்னர் லாரிகளில் சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள, 'யூனியன் கார்பைட்' பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984 டிச., 23ல், விஷயவாயு கசிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்த சம்பவத்தில், 5,479 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, உடல் உறுப்புகளை இழந்து நிரந்தர சுகாதார பிரச்னைகளால், ஐந்து லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள இந்த ஆலையில் உள்ள, 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தது. உடனடியாக அந்த கழிவுகளை அகற்றி, அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, போபாலில் இருந்து 250 கி.மீ., தொலைவில், இந்துாருக்கு அருகே உள்ள பீதாம்புரில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையத்தில், இந்தக் கழிவுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக, பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 12 டிரக்குகள், போபால் ஆலைக்கு வந்தன. முழு கவச உடை அணிந்த போபால் மாநகராட்சி, சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் முன்னிலையில், கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது.
இந்நிலையில், நேற்றிரவு (ஜன.,01) போபாலில் இருந்து பிதாம்பூர் என்ற இடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் 12 கண்டெய்னர் லாரிகளில் சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. கடுமையான அறிவியல் நெறிமுறைகளையும் பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற இருக்கிறது. 337 டன் நச்சுக் கழிவை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் அழித்தால், மூன்று முதல் ஒன்பது மாதங்களுக்குள் கழிவுகள் எரிக்கப்படும் என்று அதிகாரி கூறுகிறார்.
இதற்கிடையில், பிதாம்பூர் மற்றும் இந்தூரில் உள்ள உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது உள்ளூர் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். பிதாம்பூரில் உள்ள கழிவுகளை எரிக்கும் ஆலை மிக அதிநவீன ஆலை ஆகும். ஆலையின் தரைமட்டத்தில் இருந்து 25 அடி உயரத்திற்கு மேல் சிறப்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.