sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அருண் ஜெட்லியிடம் கதறிய டி.ஆர்.பாலு; கருணாநிதி கைதில் நடந்தது என்ன?

/

அருண் ஜெட்லியிடம் கதறிய டி.ஆர்.பாலு; கருணாநிதி கைதில் நடந்தது என்ன?

அருண் ஜெட்லியிடம் கதறிய டி.ஆர்.பாலு; கருணாநிதி கைதில் நடந்தது என்ன?

அருண் ஜெட்லியிடம் கதறிய டி.ஆர்.பாலு; கருணாநிதி கைதில் நடந்தது என்ன?

21


UPDATED : மார் 19, 2026 11:17 AM

ADDED : மார் 16, 2026 08:00 AM

Google News

21

UPDATED : மார் 19, 2026 11:17 AM ADDED : மார் 16, 2026 08:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் செய்திதொடர்பாளர் பதவி மிகவும் முக்கியமானது. கட்சிக்கு நல்ல இமேஜ் ஏற்பட இந்த செய்திதொடர்பாளர்களின் பணி அவசியம். கட்சிக்கு எதிராக செயல்படும் மீடியாக்களை கண்டு ஒதுக்காமல் அவர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். இவர்களுக்கு நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் உடனுக்குடன் தெரிந்திருக்க வேண்டும்.

சமீபத்தில் நம்மவர் ஒருவர் வட இந்திய ஆங்கில சேனலின் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி சமாளிக்காமல் ஹாஹா என சிரித்து தமிழர்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தினார். கட்சிக்கு எதிராக என்ன சொன்னாலும் அதை சமாளிக்கும் திறன் அவசியம். சில ஆண்டுக்கு முன் காங்கிரசின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் வித்தல்ராவ் காட்கில். இந்திரா, ராஜிவ், நரசிம்மராவ் என பலருடனும் பணியாற்றியவர்.

அமைச்சராகவும் இருந்தவர். தினமும் கட்சி சார்பாக நிருபர் கூட்டம் நடைபெறும் போது கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்வார். சில வேண்டாத கேள்விகள் வரும் போது காது கேட்காத மாதிரி இருந்து தப்பித்துவிடுவார். பத்திரிகையாளர்கள் இவரை மிகவும் நேசித்தார்கள். எப்போது வேண்டுமானாலும் இவரை தொடர்பு கொள்ளலாம்.

அந்த அளவிற்கு மீடியாவில் அப்போது பிரபலமாக இருந்தவர். 2001ல் காலமாகிவிட்டார். இவரைப் போல ஒருவர் காங்கிரசில் இதுவரை இல்லை. டில்லி பத்திரிகையாளர்கள் மற்றும் பாஜக சீனியர் தலைவரகளிடையே….இவர் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என அவரின் இழப்பை நினைத்து இன்றுவரை வருந்துகின்றனர். அவரைப் பற்றித்தான் இந்த கட்டுரை

கருணாநிதி கைது

அவர் அருண் ஜெட்லி. டில்லியில் பிறந்து காமர்ஸ் டிகிரி படித்து பின் டில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். எமர்ஜென்சி காலத்தில் டில்லி பல்கலைக்கழகத்தில் பாஜ மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யா பரிஷத்தில் தலைவராக இருந்தவர். இப்படித்தான் இவர் அரசியலுக்கு வந்தார்.

இவரை முதன் முதலாக நான் சந்தித்தது தமிழக அரசியலில் புயல் வீசிய நேரம். அப்போது நான் என்.டி.டி.வி.,யில் விஜய் செய்திகளுக்காக பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஜூன் 30, 2001. திமுக தலைவர் கருணாநிதி நடு இரவில் கைது செய்யப்படுகிறார். அப்போது ஜெயலலிதா தமிழக முதல்வர். வாஜ்பாய் பிரதமராக இருந்தார். டில்லி அரசியல் களம் நடு இரவே பரபரப்பானது. எங்கள் டிவியில் இரவு முழுக்க இந்த செய்தி நேரடி ஒளிபரப்பானது. காலை வெகு சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன்.

என்னையும் இன்னொரு நிருபரையும் அருண் ஜெட்லியைப் பார்த்து கருணாநிதி கைது குறித்து ஒரு சிறிய பேட்டி எடுத்து வர சொன்னார்கள். எங்கள் அலுவலகத்திற்கு அருகிலேதான் அருண் வீடு இருந்தது. அப்போது அவர் வாஜ்பாய் அரசில் சட்ட அமைச்சராக இருந்தார். அத்தோடு அரசின் செய்தி தொடர்பாளரும் அவரே. அப்போது பாஜ கூட்டணியில் திமுக இருந்தது. முரசொலி மாறன், டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர்.

நாங்கள் அவரது வீட்டிற்கு காலை 7 மணிக்கே சென்றுவிட்டோம். பக்கத்து அறையில் அவர் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சு எங்கள் காதுகளிலும் கேட்டது.

“மிஸ்டர் பாலு… என்ன நடந்தது என விவரமாக சொல்லுங்கள்... என்னது, நீங்கள் இப்போது லாக் அப்பில் இருக்கிறீர்களா? உங்களை எப்படி கைது செய்ய முடியும்? என்னது முரசொலி மாறன் வீட்டிற்கும் போலீஸ் வந்ததா?”

இப்படி அருண் ஜெட்லி பேசுவது எங்களுக்கு துல்லியமாக கேட்டது. நாங்கள் புரிந்து கொண்டோம், அது டி.ஆர்.பாலு என்று. போனில் பேசிவிட்டு எங்களிடம் வந்தார். பேசியது டி.ஆர்.பாலு என்றும் மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் என தெரிவித்தார் அருண் ஜெட்லி. முதல் தகவல் அறிக்கை சரியா, தவறா என விசாரிக்காமலேயே எப்படி கைது செய்யலாம்?

இது மனித உரிமை மீறல். மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு வீடுகளுக்கு எப்படி போலீஸ் போகலாம்? அவர்களுக்கும் இந்த முதல் தகவல் அறிக்கைக்கும் சம்பந்தமே இல்லை, முதல்வரின் இந்த செயல் தனிப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்டது என கருணாநிதியின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து எங்களுக்கு பேட்டி கொடுத்தார்.

1999 ஏப்ரல் மாதம் வாஜ்பாய் அரசுக்கு அளித்திருந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றதால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜ அரசு கவிழ்ந்தது. இதை மனதில் வைத்து ஜெயலலிதாவிற்கு எதிராக அருண் ஜெட்லி கருத்து தெரிவித்தார் போலிருக்கிறது.

வக்கீல்

சிறந்த அரசியல்வாதிகள் பலர் தலை சிறந்த வக்கீல்களாக பணிபுரிந்துள்ளனர். அந்த பட்டியலில் வருபவர் அருண் ஜெட்லி. நண்பர்கள் மட்டுமன்றி தன்னை சந்திக்க வருபவர்களை உபசரித்து அனுப்புபவர். வக்கீலாக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பொது மேடையிலோ அல்லது டிவியிலோ பேசும் போது கவனித்தால் ஒன்று தெரிந்திருக்கும்.

எடுத்துக்கொண்ட விஷயத்தை அருமையாக எந்தவித குழப்பமும் இன்றி தெளிவாக பேசுவார்கள். டிவி விவாதங்களில் கோர்ட்டில் எப்படி வாதாடுவார்களோ அப்படி விவாதிப்பார்கள். அருண் ஜெட்லியும் அப்படித்தான். பார்லிமென்டில் பல முறை இவர் பேச்சை கவனித்திருக்கிறேன். எதிர்க்கட்சியை கலங்கடித்தவர். எங்கள் டிவி விவாதங்களிலும் அதிகம் பங்கேற்றவர். சிரித்துக்கொண்டே எதிர்க்கட்சியின் காலை வாருவதில் வல்லவர்.

கரன்ட் தராத கஞ்சர்

வேறு சில வக்கீல் - அரசியல்வாதிகளைப் பற்றி இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும். இவர் வீட்டிற்கு பேட்டி எடுக்க சென்றால் தண்ணீர் கூட தரமாட்டார். இதுதான் போகட்டும் என்றால் கேமராவிற்கு தேவையான எங்கள் லைட்டை ஆன் செய்ய இவர் வீட்டு மின்சாரத்தையும் உபயோகிக்கக் கூடாது என கறாராக சொல்லிவிடுவார்.

இவரைப் பற்றி உச்சநீதிமன்ற வக்கீல்கள் மத்தியில் ஒரு பேச்சு உண்டு -ஒரு முறை இவர் வாதாடும் வழக்கிற்காக டில்லியில் 5 நட்சத்திர ஹோட்டலில் இவருக்கு மனுதாரர் அறை புக் செய்திருந்தார். அறையைக் காலி செய்யும் போது அங்குள்ள விலை உயர்ந்த பெயிண்டிங்குளை எடுத்து சென்றுவிட்டாராம் வக்கீல். அதற்கான பணத்தையும் மனுதாரர்தான் கட்டினார். இவர் இப்போதும் எம்பியாக உள்ளார்.

அடுத்தவர் மிகவும் பிரபலமானவர். சட்ட அமைச்சராகவும் இருந்தவர். வயதானவர். இப்போது உயிரோடு இல்லை. கோர்ட்டில் தன்னிஷ்டப்படி யாரையும் கண்டபடி பேசும் வழக்கும் உடையவர். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பரபரப்பான கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆஜராகில் கோர்ட்டில் புயலை ஏற்படுத்தியவர்.

எங்கள் டிவியில் இரவு 9 மணிக்கு விவாதங்கள் நடைபெறும். அதில் சிலர் டிவி ஸ்டூடியோவிற்கு வருவார்கள். மற்றவர்கள் வீட்டிற்கு கேமராவும் டிவியின் விருந்தினர் செக்ஷனிலிருந்து ஒருவரும் செல்வார்கள். இந்த விருந்தினர் செக்ஷனில் அதிகம் பணியாற்றுவது இளம் பெண்கள்தான். ஒரு பெண் என்னிடம் ஒரு முறை சொன்னார்.

“சார்..அந்த வக்கீல் (மேலே சொன்னவர்தான்) வீட்டிற்கு மட்டும் நாங்கள் யாரும் போக மாட்டோம். ஆண்களைத்தான் அனுப்புவார்கள்.” ஏன் என கேட்டதற்கு அவர் சொன்ன பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “ நம்ம டிஸ்கஷன் நடப்பது இரவு 9 மணிக்கு மேல். அவரோ 8.30 மணியிலிருந்தே கையில் கிளாஸுடன் இருப்பார். டிவி விவாதங்களுக்கு இடையே விளம்பரம் வரும் போது குடிப்பார். திடீரென எங்களை கட்டி அணைப்பார்…இதனால் யாரும் அவர் வீட்டிற்கு போவதில்லை”

இப்படியும் மனிதர்கள்!


சரி, அருண் ஜெட்லிக்கு வருவோம்.

கருணாநிதி கைது சம்பவத்திற்கு பிறகு இவரை நான் சந்தித்தது உச்ச நீதிமன்றத்தில். தலைமை நீதிபதியின் கோர்ட்டிற்கு வெளியே நின்றிருந்தார். இவருடைய செயலர் கையில் ஒரு கிண்ணத்தில் பழங்களை துண்டு போட்டு வைத்திருந்தார். அதை ஒரு சிறிய குச்சியால் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அடுத்த வழக்கிற்காக காத்திருக்கும் போது சில சீனியர் வக்கீல்கள் இப்படி கொறிப்பதுண்டு.

“உன்னுடைய ரிப்போர்ட்டிங்கை பார்த்திருக்கிறேன். குட்” என்றார்.

நன்றி தெரிவித்தேன். அவர் தொடர்ந்தார்.

“உங்கள் சேனல் தொகுப்பாளர்களை மையமாக வைத்து செயல்படுகிறது…செய்தியை வைத்து அல்ல (Your channel is anchor driven not news driven)” என்றார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை. ராஜ்தீப், அர்னப் கோஸ்வாமி, சீனுவாசன் ஜெயின், பர்க்கா தத், சோனியா சிங் என என்.டி.டி.வியில் யார் செய்தி படிக்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான் எங்கள் சேனலை பார்க்கின்றனர். இது அப்போதைய நிலவரம்.

அருண் ஜெட்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு புகழ் பெற்ற வக்கீலாக இருந்தார்.

ஆளுக்கொரு அறை

டில்லியின் முக்கிய பகுதியான பெங்காலி மார்க்கட் ஏரியாவில் இவர் அலுவலகம் இருந்தது. அங்குதான் சீனியர் எடிட்டர்களையும் நிருபர்களையும் அருண் சந்திப்பது வழக்கம். இரண்டு அல்லது மூன்று வேறு வேறு சேனல் எடிட்டர்களை அழைத்துவிடுவார். அவர்கள் தனித்தனி அறையில் அமர்த்தப்படுவார்கள். அடுத்த அறையில் இன்னொரு எடிட்டர் இருப்பது முதல் அறையில் இருப்பவருக்கு தெரியாது.

ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து ஆன் ரிகார்ட், ஆப் தி ரிகார்ட் என தாராளமாக செய்திகளை வாரி வழங்குவார். அதே சமயம் சம்பந்தப்பட்ட சேனல்கள் எந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறது என்பதை தெரிந்துதான் அதற்கேற்றது போல செய்தி தருவார்.

பாஜ ஆட்சியில் இருந்த போது ஏதாவது ஒரு செய்தியை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் இவருக்கு போன் செய்தால் போதும். உடனே அந்த செய்தி சரியா, தவறா என சொல்லிவிடுவார்.

அதே சமயம் எதிர்கட்சிகளுக்கு எதிராக செய்திகளை கசியவிடுவதிலும் இவர் தேர்ந்தவர்.

மோடிக்கு துணை நின்றவர்

2014ல் மோடி பிரதமரான போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அருண் ஜெட்லி. குஜராத் அரசியலில் பெரிய ஆளாக இருந்தாலும் டில்லி அரசியல் முற்றிலும் வேறு. இதனால் டில்லி அரசியல் நுணுக்கங்களை மோடிக்கு விளங்க வைத்தவர் அருண் என பாஜகவில் அப்போது சொல்வார்கள். 1993-94ல் குஜராத் மாநில அரசியலில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக டில்லி வந்தார் மோடி. பாஜவில் ஹிமாச்சல் பார்வையாளராக நியமிக்கப்பட்டார். கட்சி அலுவலகத்திலேயே தங்கினார் மோடி.

அப்போதுதான் அருண் ஜெட்லி இவருக்கு உதவினார். தனியாகத்தானே இருக்கிறாய்…வீட்டிற்கு வா என அடிக்கடி தன் வீட்டிற்கு இரவு சாப்பாட்டிற்கு மோடியை அழைப்பார். மோடியிடம் கார் கிடையாது. கட்சியும் இவருக்கு கார் தரவில்லை. இதனால் அருண் கார் அனுப்பி மோடியை வீட்டிற்கு அழைத்துக்கொள்வார். அதே போல சாப்பிட்டு முடிந்ததும் காரிலேயே திருப்பி அனுப்புவார். அருணுக்கு தனியாக சாப்பிடுவது பிடிக்காது. கூடவே நண்பர்கள் இருக்க வேண்டும்.

2001ல் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போது அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேல் அதை சரியாக கையாளவில்லை. இதனால் முதல்வரை மாற்ற வேண்டும் என கட்சிக்குள் குரல்கள் எழுந்தன. வாஜ்பாய்க்கு நெருக்கமானவர் பட்டேல். அதனால் வாஜ்பாய் தயங்கினார். ஆனால் அத்வானி, அருண் ஜெட்லி, பிரமோத் மகாஜன் ஆகியோர் மோடிதான் முதல்வராக வேண்டும் என சொன்னார்கள். கடைசியில் மோடி குஜராத் முதல்வரானார்.

2014 பார்லிமென்ட் தேர்தலின் போது பாஜ பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்னை எழுந்தது. அத்வானி தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால் அருண் ஜெட்லி உட்பட மற்ற பாஜ தலைவர்கள் மோடிக்கு ஆதரவளித்தனர். மோடி பிரதமரானதும் அருண் சிபாரிசு செய்தவர்கள் அனைவரும் மத்திய அரசில் அமைச்சர்களானார்கள். சட்ட விஷயங்களில் மோடிக்கு சரியான ஆலோசனை கொடுத்தவரும் இவர்தான்.

“ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசு வேலைக்காக அலைகிறார்கள்”

பார்லிமென்டிலும் வெளியிலும் ஒரு விஷயத்தை அருண் ஜெட்லி அடிக்கடி எதிர்த்து வந்தார். ஓய்வு பெறும் நீதிபதிகள் அரசு தரப்பில் ஏதாவது வேலை கிடைக்குமா என எதிர்பார்க்கக்கூடாது என பேசி வந்தார்.

நீதிபதிகள் பதவியில் இருக்கும் போது அவர்களுக்கு அரசு தரப்பில் பங்களா, கார் என அனைத்து வசதிகளும் உண்டு. பதவி ஓய்வு பெற்ற பிறகு இந்த அளவிற்கு வசதிகள் கிடைக்காது. இதனால் சில நீதிபதிகள் ஓய்வு பெற்றாலும் கையில் பயோ டேட்டாவுடன் என்னை வந்து பார்க்கின்றனர் என ஒரு முறை சொன்னார் அருண் ஜெட்லி.

என்ன இப்படி சொல்கிறாரே என நீதித்துறையில் இருந்த பலர் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் உள்ளுக்குள் வருந்தினர். ஆனால் அவர் சொன்னதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் என் எதிரேயே நடந்தது.

ஒரு நிகழ்ச்சியில் அருண் கலந்து கொண்டார். அதில் நானும் இருந்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் நானும் அவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

“சீக்கிரம் நீ வேறு சேனலில் வேலை தேடு” என எனக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

நான் கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தேன்.

“உன் சேனல் பாஸ் பல பிரச்னைகளில் சிக்கியுள்ளார்…அதனால்தான் சொன்னேன்” என்றார்.

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது சற்று அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அருண் ஜெட்லியுடன் பேசுவதற்காக அவர் காத்திருக்கிறார் என்பது அவருடைய பாவனையிலிருந்தே தெரிந்தது. அவர் ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. அவர் கோர்ட்டில் பல வழக்குகளில் செய்தி சேகரித்துள்ளேன்.

அவருடைய பெயரை அழைத்து…” இரண்டு நாள் கழித்து பார்க்கலாமே” என அவரிடம் சொன்னார் ஜெட்லி. அவரும் சரி என சென்றுவிட்டார்.

“இவரை உனக்கு தெரியுமா”

“தெரியும். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி” என அவரின் பெயரைச் சொன்னேன்.

“அவருக்கு வேலை வேண்டுமாம்…ஓய்வு பெற்றவர்களில் பாதி பேர் இப்படித்தான் அலைகிறார்கள்” என்றார்.

பதவி வேண்டாம்

அருண் ஜெட்லிக்கு உடல் ரீதியாக பலவித பிரச்னைகள். சர்க்கரை நோய். இதய அறுவை சிகிச்சை, தொடர்ந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பலவித பிரச்னைகளில் சிக்கி தவித்தார். போதாக்குறைக்கு 2019ல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். 2019 மே மாதம் மோடி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்ற போது தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என தன் உடல்நிலையை காரணம் காட்டி மறுத்துவிட்டார். இதனால் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சரானார்.

ஆகஸ்ட், 2019ல் டில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். நானும் இன்னொரு சீனியர் பத்திரிகையாளரும் எய்ம்ஸ் சென்று அவரைப் பார்க்க போனோம். அவருடைய மகள்தான் எங்களை சந்தித்தார். அருண் ஜெட்லியை குடும்பத்தினர் தவிர வேறு யாரையும் சந்திக்க அனுமதியில்லை. சிறிது நேரம் அருண் மகளிடம் நலம் விசாரித்துவிட்டு திரும்பினோம். அடுத்த நான்கு நாட்களில் - ஆகஸ்ட் 24ல் காலமானர்.தேசிய அரசியலை நன்கு அறிந்து அதற்கேற்ப திறம்பட செயல்பட்டவர் அருண் ஜெட்லி என்றால் அது மிகையில்லை.

- அ.வைத்தியநாதன்

கமென்ட் செய்யுங்க வாசகர்களே!

டிவி குழுவினருக்கு கரன்ட் தராமல் கஞ்சத்தனம் காட்டும் வக்கீல் யார்? 'கட்டிப்பிடி' புகாருக்கு ஆளான மூத்த வக்கீல் யார் என்று யூகித்து கமென்ட் செய்யுங்க வாசகர்களே!

Image 1549725

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.

தொடர்புக்கு: mailto:vaithi@dinamalar.in






      Dinamalar
      Follow us