வர்த்தகம் - வரி விசா: அமெரிக்க அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு
வர்த்தகம் - வரி விசா: அமெரிக்க அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு
ADDED : செப் 23, 2025 07:32 AM

நியூயார்க் : ஐ.நா.,வின் 80வது பொது சபைக் கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நம் நாட்டின் மீது 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தார். மேலும், வர்த்தகம் தொடர்பான பேச்சும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக தொடர்ந்து அவர் கூறி வருகிறார்.
இதையடுத்து, இந்தாண்டு ஐ.நா., கூட்டத்தில் பங்கேற்பதை பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்துள்ளார். நம் நாட்டின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
இதற்கிடையே, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான 'எச்1பி' விசா கட்டணத்தை பல மடங்கு உயர்த்தினார் டிரம்ப்.
இந்த சூழ்நிலையில், ஐ.நா., பொது சபை கூட்டத்துக்கு இடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவை, அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, வர்த்தகம், வரி, விசா கட்டணம் உள்ளிட்டவை தொடர்பாகவும், சர்வதேச பிரச்னைகள் குறித்தும் இருவரும் பேசியதாக தெரிகிறது.
முன்னதாக, ஆசிய நாடான பிலிப்பைன்சின் வெளியுறவு அமைச்சர் டெஸ் லாசரோ உடன் ஜெய்சங்கர் பேசினார்.