இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தப் பேச்சு நிறைவடைந்தது; மத்திய அரசு அறிவிப்பு
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தப் பேச்சு நிறைவடைந்தது; மத்திய அரசு அறிவிப்பு
ADDED : ஜன 26, 2026 09:05 PM

புதுடில்லி: முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வெற்றிகரமாக முடித்துள்ளதாக வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, 2007-ல் துவங்கி, 2013 வரை பல சுற்றுகளாக நடந் தது. ஆனால், கார், மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப இந்திய நிறுவனங்களுக்கான தரவு பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் விதிகள் போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பேச்சு நின்று போனது. கடந்த 2022 ஜூனில் மீண்டும் அதிகாரப்பூர்வ பேச்சு துவங்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளது.
இது குறித்து வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. இது குறித்து நாளை அறிவிக்கப்படும். சட்டரீதியான ஆய்வுகளுக்குப் பிறகு முறையான ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இந்த ஒப்பந்தம் சமநிலையானதாகவும், எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும். ஐரோப்பிய ஒன்றியம் உடனான உறவை வலுப்படுத்தும். ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும். இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும்.
சட்டப்பூர்வ ஆவணங்களை ஆய்வு செய்ய 5-6 மாதங்கள் ஆகும், அதன் பிறகு முறையான கையெழுத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

