அமெரிக்காவுடனான வர்த்தக உறவு; அவசரநிலை முன்னெடுப்புகளில் மத்திய அரசு தீவிரம்; ஜெய்சங்கர்
அமெரிக்காவுடனான வர்த்தக உறவு; அவசரநிலை முன்னெடுப்புகளில் மத்திய அரசு தீவிரம்; ஜெய்சங்கர்
ADDED : ஏப் 11, 2025 12:19 PM

புதுடில்லி: அமெரிக்காவுடனான வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
கார்னேஜ் இந்தியா குளோபல் டெக்னாலஜி மாநாட்டில் அவர் பேசியதாவது: உலக நாடுகளுடனான அணுகுமுறையை அமெரிக்கா மாற்றியுள்ளது. இது ஒவ்வொரு துறையிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தொழில்நுட்பத்துறையில் அதிக விளைவுகளை ஏற்படுத்தும என்று நம்புகிறேன். மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவை, மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவதில் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்களிக்கும்.
அமெரிக்காவில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைப் பற்றி என்னை விட நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள். கடந்த ஆண்டு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அதைப் போல, இந்த ஆண்டிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுதான் பரிணாம வளர்ச்சி. சீனாவில் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஒன்று தான் டீப் சீக். . சீனாவால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் அமெரிக்காவை போலவே விளைவுகளை கொண்டவை. அமெரிக்காவில் நிர்வாக மாற்றம் ஏற்பட்ட ஒரு மாதத்திற்குள்ளேயே, இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டது.
டிரம்ப் நிர்வாகத்தின் முந்தைய ஆட்சியின் போது, வர்த்தகம் தொடர்பாக 4 ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், இந்த முறை அவசரநிலை முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். எங்களின் வணிகக் குழுக்கள், முன்பைப் போல இல்லை. வர்த்தகம் தொடர்பான முன்னெடுப்புகளில் மந்தமாக செயல்படுவதாக கடந்த காலங்களில் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது, அது முற்றிலும் மாறிவிட்டது, இவ்வாறு அவர் கூறினார்.

