ஆய்வு பணிக்காக 36 ஆண்டுக்கு பின் ஹவுரா பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
ஆய்வு பணிக்காக 36 ஆண்டுக்கு பின் ஹவுரா பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
ADDED : நவ 17, 2024 07:50 AM

கோல்கட்டா : கோல்கட்டா மற்றும் ஹவுரா நகரை இணைக்கும், 81 ஆண்டுகள் பழைமையான ஹவுரா பாலத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்வதற்காக, 36 ஆண்டுகளுக்கு பின், அங்கு நேற்று ஐந்து மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் ஹூக்ளி நதியின் குறுக்கே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஹவுரா பாலம் கட்டப்பட்டது.
இது, கடந்த 1943ல் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. 'சஸ்பென்ஷன் டைப் பேலன்ஸ்ட் கேன்டிலிவர்' பொறியியல் முறையில் கட்டப்பட்ட இந்த பாலம், இந்த வகையில் உலகின் ஆறாவது நீளமான பாலம்.
இந்த பாலத்துக்கு அருகிலேயே கோல்கட்டாவின் நுழைவாயிலாக கருதப்படும் ஹவுரா ரயில் நிலையம் உள்ளது. இதன் காரணமாக இன்றும் ஹவுரா பாலம் பரபரப்பாக காணப்படுகிறது. தினசரி ஒரு லட்சம் வாகனங்கள், 1.5 லட்சம் பாதசாரிகள் இந்த பாலத்தை பயன்படுத்துகின்றனர்.
ஹவுரா பாலத்தில் போக்குவரத்தை குறைக்க, அதற்கு சற்று தொலைவில் வித்யாசாகர் பாலம் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் ஹவுரா பாலத்தில் போக்குவரத்து குறையவில்லை.
இந்த பாலத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கோல்கட்டாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் கடைசி யாக, 1983 - 1988 வரையிலான காலத்தில் ஹவுரா பாலத்தின் ஸ்திரத்தன்மையை முழுமையாக ஆய்வு செய்தது.
தற்போது 36 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், மீண்டும் நேற்று 'ரைடெஸ்' என்ற பொதுத் துறை நிறுவனம் பாலத்தை ஆய்வு செய்தது. இதற்காக ஐந்து மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் ஆய்வறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்.