பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
UPDATED : ஜூன் 04, 2025 10:31 PM
ADDED : ஜூன் 04, 2025 08:04 PM

பெங்களூரு: பெங்களூரு கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு
பெங்களூரு மைதானத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், மனதை நொறுங்கச் செய்வதாகவும் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்.
பிரதமர் மோடி
பெங்களூருவில் நடந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல்
பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மனதை உலுக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும்.
இந்த துயரமான நேரத்தில் பெங்களூரு மக்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த சோகம் ஒரு வேதனையான நினைவூட்டல். எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா
சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மகிழ்ச்சியின் ஒரு தருணத்தை துக்கம் மறைத்துவிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். வெற்றி அணிவகுப்பை அனுமதிக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, ஆனால் மைதானத்திற்கு அருகில் மக்கள் கூட்டம் அலைமோதியது இந்த துயரத்திற்கு வழிவகுத்தது. எப்போதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புமணி (பா.ம.க.,)
அளவு கடந்த கூட்டம் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வெற்றிக் கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும்.
இவற்றைச் செய்யத் தவறிய கர்நாடக அரசும், ஆர்சிபி அணி நிர்வாகமும் தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக பாஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்
பெங்களூரு அணி வீரர்களை பார்க்க குவிந்த கூட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேரில் ஆறுதல்
இது குறித்து கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சின்னசாமி ஸ்டேடியம் அருகே இன்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இந்த கடினமான தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசும்போது வருத்தமாக இருந்தது.
மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசு செய்யும் என அவர்களிடம் உறுதியளித்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.