கேரளாவில் சுத்திகரிப்புப் பணியில் சோகம்: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பலி!
கேரளாவில் சுத்திகரிப்புப் பணியில் சோகம்: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பலி!
ADDED : அக் 01, 2025 08:36 AM

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஹோட்டலில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செ ய்யும் பணியில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் ஹோட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூச்சு திணறி தொழிலாளர்கள் 3 பேர் இறந்தனர். இறந்தவர்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கம்பத்தைச் சேர்ந்த ஜெயராமன் மற்றும் கூடலூரைச் சேர்ந்த மைக்கேல் மற்றும் சுந்தர பாண்டியன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முதலில் மைக்கேல் தொட்டிக்குள் நுழைந்தார், ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சுந்தர பாண்டியன் தொட்டிக்குள் சென்றார். பின்னர் இருவரையும் மீட்கும் முயற்சியில் ஜெயராமன் ஈடுபட்டுள்ளார். பின்னர் மூவரும் தொட்டிக்குள் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு படையினர் மூன்று உடல்களையும் தொட்டியில் இருந்து மீட்டனர்.
அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இடுக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொட்டியின் உள்ளே ஆக்ஸிஜன் பற்றாக்குறையே இந்த துயரத்திற்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.