மஹாராஷ்டிராவில் வதந்தியால் ஏற்பட்ட துயரம்: ரயில் மோதி 12 பேர் உயிரிழப்பு
மஹாராஷ்டிராவில் வதந்தியால் ஏற்பட்ட துயரம்: ரயில் மோதி 12 பேர் உயிரிழப்பு
UPDATED : ஜன 22, 2025 10:33 PM
ADDED : ஜன 22, 2025 06:07 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தியால், தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில், 12 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து உ.பி.,யின் லக்னோவுக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. மஹாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியை கடந்த போது, ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து 30 முதல் 40 பயணிகள் உயிர் பயத்தில் ரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது, மறுபுறத்தில் டில்லியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் இவர்கள் மீது மோதியது.இவ்விபத்தில் 12 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்தில் விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
உ.பி., முதல்வர் ஆறுதல்
விபத்து குறித்து அறிந்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதாக தெரிவித்து உள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.